சூப்பர்! விரைவில் சோதனை ஓட்டம்!முதல் ஹைட்ரஜன் ரெயில் சென்னையில்!!!
Seithipunal Tamil March 17, 2025 07:48 PM

இந்தியாவில் மொத்தம் 19 ரெயில்வே மண்டலங்கலுள்ள நிலையில், இங்கிருந்து 13000 க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது.பயணிகளின் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு கூடுதல் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உலக நாடுகளுக்கு இணையாக ரெயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் 'ஹைட்ரஜன்' ரெயிலை உற்பத்தி செய்ய மத்திய ரெயில்வே வாரியம் திட்டமிட்டது. அதன்படி, கடந்த ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் ஹைட்ரஜன் ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக ரூ.2300 கோடி மதிப்பீட்டில் 35 ஹைட்ரஜன் ரெயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) ஹைட்ரஜன் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில்,தற்போது ஹைட்ரஜன் ரெயில் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து அடுத்த மாதம் சோதனை ஓட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

முதல் ஹைட்ரஜன்:

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலானது அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த்-சோனிபட் இடையே 89 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில்தான் அடுத்த மாதம் சோதனை ஓட்டமும் நடைபெறுகிறது. ரெயிலில் 1,200 எச்.பி. திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த ரெயில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரெயில்வே அதிகாரிகள்:
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது,"பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் ரெயில் உலகில் அதிக திறன் கொண்ட ரெயிலாகும். மற்ற நாடுகளில் அதிகபட்சம் 5 பெட்டிகள் வரை இருக்கும். ஆனால், முதன்முறையாக இந்தியாவில் 10 பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் ரெயில் சேவை இயக்கப்பட இருக்கிறது.

இது உலக நாடுகளுக்கே ஒரு முன்னுதாரணம். ஒவ்வொரு ரெயிலும் ரூ.80 கோடி செலவில் தயாரிக்கப்படும். கார்பன் உமிழ்வால் இயற்கை மாசடைவதை தடுக்கும் வகையில் மலைப் பகுதிகளில் ஹைட்ரஜன் ரெயில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அந்த வகையில்தான் முதல் ரெயில் வடக்கு ரெயில்வேயில் இயக்கப்படவுள்ளது.

ஐ.சி.எப். தொழிற்சாலையில் ஹைட்ரஜன் ரெயில் தயாரிப்பு பணி 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. விரைவில் சோதனை ஓட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும். 2030-ம் ஆண்டுக்குள் இந்திய ரெயில்வேயில் கார்பன் உமிழ்வுவை பூஜ்ஜியமாக மாற்றும் முயற்சியில் இந்த ஹைட்ரஜன் ரெயில் முன்னோடியாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.