அமெரிக்காவின் மிசூரி மாநிலம் இண்டிபெண்டென்ஸ் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 34 வயது மாரியா பைக் மற்றும் அவரது 3 மாத குழந்தை டெஸ்டினி மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரியா பைக் பேச முடியாதவர், எனவே அவரது உடல்மொழி மூலம் போலீசாருடன் பேச முயன்றார். அப்போது, ஒரு பெரிய கத்தியை எடுத்துக் கொண்டு திடீரென போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், ஒரு அதிகாரி தப்பி ஓடினார், ஆனால் மற்றொரு போலீசாருக்கு பின் செல்ல இடமின்றி அவர் மாட்டிக்கொண்டதாக தகவல் தெரிவிக்கிறது. இதன் காரணமாக, அந்த அதிகாரி தனது துப்பாக்கியில் நான்கு தோட்டாக்களை பைக் மற்றும் அவரது குழந்தை மீது ஏவினார், இதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
ஜாக்சன் கவுண்டி வழக்கறிஞர் மிலெசா ஜான்சன் தலைமையிலான விசாரணை அதிகாரிகள், “இந்த துப்பாக்கிச்சூடு சட்டத்தின் பாதுகாப்புக்குள் வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த அதிகாரி மாரியா பைக் மாற்றும் அவரது குழந்தையை நோக்கி திட்டமிட்டு சுட்டாரா? அல்லது தவறுதலாக நடந்ததா? என்பதற்கான தெளிவான ஆதாரம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. “துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி குழந்தையுடன் இருந்த மாரியா பைக்கை தாக்கினார் என்பது மட்டுமே உறுதியாக உள்ளது” என வழக்கறிஞர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
“ஒரு தாய் மற்றும் ஒரு குழந்தை கொல்லப்பட்டுள்ளனர், ஆனால் அதற்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை” என மாரியா பைக்கின் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “நாங்கள் இந்த முடிவை எளிதாக எடுக்கவில்லை. இளம் தாய் மற்றும் அவரது குழந்தையை இழந்து விடுவது மிகுந்த துயரமான மற்றும் சோகமான விஷயம். ஆனால், எங்களது சட்டப்பூர்வ கடமையின் அடிப்படையில், இந்த வழக்கில் அதிகாரியின் நடவடிக்கை சட்டப்படி சரியானது” என வழக்கறிஞர் மிலெசா ஜான்சன் தெரிவித்தார். இருப்பினும், இந்த தீர்ப்பு போலீசாருக்கு ஆதரவாக வழங்கப்பட்டிருப்பதால், சமூகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் மாரியா பைக்கின் குடும்பம் நீதிக்காக போராடுவது தொடரும் என கூறப்பட்டுள்ளது.