பிசினஸ் விசாவில் 59 முறை இந்தியாவுக்கு வந்த நைஜீரிய பெண்கள்; ரூ.75 கோடி போதைப்பொருளுடன் கைது!
Vikatan March 17, 2025 08:48 PM

உள்நாட்டு விமான நிலையத்தில் பெரிய அளவில் சோதனை இருக்காது என்பதால், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

நைஜீரியாவை சேர்ந்த பாம்பா பாண்டா(31), அபிகையில் அடோனி(30) ஆகியோர் இன்று கர்நாடகா மாநிலம் மங்களூரு விமான நிலையத்துக்கு வந்து இறங்கினர். அவர்களது டிராலி பேக்கை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தபோது எம்.டி.எம்.ஏ. எனப்படும் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இரண்டு பேரிடமும் மொத்தம் 37 கிலோ போதைப்பொருள் இருந்தது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.75 கோடியாகும். போதைப்பொருள் மட்டுமல்லாது ரூ.18 ஆயிரம் பணமும், பாஸ்போர்ட், மொபைல் போன் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து மங்களூரு போலீஸ் கமிஷனர் அகர்வால் கூறுகையில்,''நைஜீரியாவை சேர்ந்த இரண்டு பெண்களும் டெல்லியில் இருந்து கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விமானத்தில் போதைப்பொருளை எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

இதில் பாண்டா கடந்த 2000-ம் ஆண்டு பிசினஸ் விசாவில் இந்தியாவிற்கு வந்துள்ளார். அடோனி 2016-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் வசித்து வருகிறார். டெல்லியில் இருந்து மும்பைக்கு 37 முறையும், பெங்களூருவிற்கு 22 முறையும் போதைப்பொருள் கடத்தி இருப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

கைது

இரண்டு பேரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு ஹைதர் அலி என்பவன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடத்தி நைஜீரியாவை சேர்ந்த பீட்டர் என்பவர் 6 கிலோ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்''என்றார்.

அதனை தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக நடத்திய விசாரணையில் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களுக்கும் போதைப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் ஆப்பிரிக்க நாட்டு பிரஜைகள் பெருமளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.