உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய இந்து கோயில் ஆகும். இக்கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி சாமி தரிசனத்திற்காக வருகை புரிகிறார்கள். அதோடு முக்கிய மத சுற்றுலா மையமாக மாறியுள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ. 400 கோடி வரி செலுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது, இந்த தொகை பிப்ரவரி 5,2020 முதல் பிப்ரவரி 5,2025 வரை செலுத்தப்பட்ட வரி பணமாகும் என்று கூறினார். இதில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ 270 கோடி செலுத்தப்பட்டதாக தெரிவித்தார். இதுபோக மீதமுள்ள 120 கோடி பல்வேறு வரி வகைகளின் கீழ் செலுத்தப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.