ரூ.8.47 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்; மும்பை விமான நிலைய ஊழியர்கள் உற்பட்ட 05 பேர் கைது..!
Seithipunal Tamil March 18, 2025 08:48 AM

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.8.47 கோடி மதிப்பிலான 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெற்ற தேடுதல் வேட்டைகளில் நான்கு வெவ்வேறு சம்பவங்களின் போது விமான நிலைய ஊழியர்கள் 03 பேர் உள்பட 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தை கடத்தி வந்தவர்கள் தங்கள் உள்ளாடைகள், பைகள் உள்ளிட்டவற்றில் தங்கத்தை மறைத்து கடத்தி வர முயற்சி செய்தபோது அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. முதலாவதாக விமான நிலைய ஊழியர் ஒருவர் 2.8 கிலோ எடை கொண்ட ரூ.2.27 கோடி மதிப்பிலான தங்கத்தை மெழுகு வடிவில் கடத்த முயற்சித்த போது அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளார்.

அத்துடன், இன்னுமொரு ஊழியர் 2.9 கிலோ எடை கொண்ட ரூ.2.36 கோடி மதிப்பிலான தங்கத்தை உள்ளாடைகளில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்ற போது சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூன்றாவதாக 1.6 கிலோ எடை கொண்ட ரூ.1.31 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒரு விமான நிலைய ஊழியர் உள்பட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களை தொடர்ந்து நான்காவதாக சர்வதேச விமானத்தின் குப்பைகள் அடங்கிய பைகளில் இருந்து 3.1 கிலோ எடை கொண்ட ரூ.2.53 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.