தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அம்மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால் இனி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தாமதமாகும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் தெலுங்கானா சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது. எதிர்வரும் 28-இல் கூட்டத்தொடரை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலில் போது காங்கிரஸ் அறிவித்த வருவாய் திட்டமிடல் இல்லாத இலவச திட்டங்களால் மாநில அரசு கடன் சுமையில் சிக்கியுள்ளதாகவும், இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் நிதிநிலை மோசமடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், இதனை ஒப்புக்கொள்ளும் விதமாக அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சட்டமேலவையில் கூறியதாவது; ''அரசு ரூ.07 லட்சம் கோடி கடன் சுமையால் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களுக்கும், ஒய்வூதியர்களும் சம்பளம் வழங்குவதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இனி வரும் காலங்களில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படும்என்றும், நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு அகவிலைப்படி உள்ளிட்ட இதர சலுகைகள் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மாநில பட்ஜெட்டில் தேவையற்ற செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரேவந்த் ரெட்டி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்ப்பாக, தெலுங்கானா நிதி அமைச்சர் கூறுகையில், நிதி நிலையை சீரமைக்க துறை வாரியாக மதிப்பீடு செய்து, செலவினங்கள் மற்றும் திட்ட செயல்படுத்தல் விவரங்களை முதல்வர் ரேவந்த் ரெட்டி சேகரித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனியார் டி.வி.சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரேவந்த் ரெட்டி , அரசு நிதி நெருக்கடியால் திணறுவதையும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்ளும் விதமாக பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.