3 நாட்களில் 21.6 கோடி கோரிக்கைகளை தீர்த்து வைத்த EPFO.. விரைவில் வட்டியும் வரப்போகுது!
ET Tamil March 18, 2025 02:48 PM
ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO, நடப்பு நிதியாண்டில் மார்ச் 6 ஆம் தேதி வரை ஆட்டோமேடிக் செயல்முறை மூலம் சுமார் 2.16 கோடி கோரிக்கைகளை நிவர்த்தி செய்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு தீர்வு எண்ணிக்கைகளைவிட இரண்டு மடங்கு அதிகம். அதற்கு முந்தைய நிதியாண்டில் EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) 89.52 லட்சம் கோரிக்கைகளைத் தீர்த்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் நேற்று மக்களவையில் பேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, தற்போது 60 சதவீத முன்பணம் கோரிக்கைகள் தானியங்கி முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளன என எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.இந்த ஆட்டோமேடிக் பயன்பாடு மூலம் முன்பணம் (பகுதி திரும்பப் பெறுதல்) கோரிக்கைகளை செயலாக்குவதற்கான வரம்பும் ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.இதுவரை பிஎஃப் பணத்தை முன்பணம் பெறுவதற்கு நோய்/மருத்துவமனை தொடர்பான கோரிக்கைகள் மட்டுமே செயல்படுத்தப்பட்ட வந்த நிலையில், இனி வீட்டுவசதி, கல்வி மற்றும் திருமணத்திற்கான பகுதி பணத்தைத் திரும்பப் பெறுவதும் ஆட்டோ பயன்முறையின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மக்களவையில் தெரிவித்தார். மேலும் ஆட்டோ பயன்முறையின் கீழ் உள்ள கோரிக்கைகள் மூன்று நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.நடப்பு நிதியாண்டில் மார்ச் 6 ஆம் தேதி நிலவரப்படி, EPFO வரலாற்றிலேயே அதிகபட்சமாக மூன்று நாட்களில் 2.16 கோடி கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இது 2023-24 நிதியாண்டில் 89.52 லட்சமாக இருந்தது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.தற்போதுவரை 96 சதவீத திருத்தங்கள் எந்தவொரு EPF அலுவலக தலையீடும் இல்லாமல் செய்யப்படுகின்றன, மேலும் 99 சதவீதத்திற்கும் அதிகமான கோரிக்கைகள் ஆன்லைன் முறை மூலம் பெறப்படுகின்றன.அடுத்தத்தாக இந்த முறை EPFO வட்டி முறையில் எவ்வித மாற்றமும் இல்லை அதே 8.25 சதவீதமே தொடரும் என என்று அறிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் இந்தாண்டின் இறுதிக்குள் வட்டி பயனாளர்கள் கணக்கில் செலுத்தப்படும் என கூறப்படுகிறது. உங்கள் கணக்கில் PF வட்டி பணம் வந்துள்ளதா என்பதை தெரிந்துகொள்ள, நீங்கள் மொபைல் நம்பரை UAN கணக்குடன் பதிவு செய்திருந்தால், 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும், அதன்பின் உங்களின் பேலன்ஸ் குறித்த விவரங்களை SMS மூலம் பெறுவீர்கள்.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.