கூவத்தூர் அருகே ஈசிஆர் சாலையில் சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து, திடீரென சாலையில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், செய்யூர் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலைய தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, செங்கல்பட்டு மாவட்டம், முகையூர் பகுதியில் பேருந்து வந்தபோது பேருந்து பழுதடைந்ததாகவும். பின்னர், சீரமைத்து குறைவான வேகத்தில் பேருந்து இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கூவத்தூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பேருந்து வந்தபோது, பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததாக தெரிகிறது. இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் தியாகராஜன் மற்றும் நடத்துநர் மனோகரன் ஆகியோர் பேருந்திலிருந்து இறங்கினர். தகவல் அறிந்த செய்யூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாக மத்திய தொழில் பாதுகாப்பு படை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணிகளை மேற்கொண்டனர். இருப்பினர் சுமார் 80 சதவிதம் பேருந்து தீயில் எரிந்து நாசமாகியது.
பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இதனால், ஈசிஆர் சாலையில் சிறிது நேரம் இரு வழியிலும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது பேருந்து தீப்பற்றி எறிந்த குறித்து கூவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன...