தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மாலை 6:00 மணி ஆகியும் பாஜகவினரை விடுதலை செய்யாததால் தமிழிசை மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கடுமையாக வாக்குவாதம் செய்ததால் பெரும் பிரச்சனையாக மாறியது. இந்நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசனும் கைது செய்யப்பட்டார். இதற்கு தற்போது வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் தள பதிவை போட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
மக்களின் ஜனநாயக உரிமையை வேரறுக்க துடிக்கும் பாசிச திமுக அரசே!
உங்களின் கேடுகெட்ட டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து அறவழியில் போராட முயன்ற பாஜக தலைவர்களையும் தொண்டர்களையும் வீட்டுச் சிறையில் வைப்பதும், அடிப்படையின்றி அவர்களைக் கைது செய்வதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது அராஜகத்தின் உச்சம், ஆணவத்தின் மிச்சம்!
நமது நாட்டு பிரதமரின் உருவப்படங்களை எரிக்கும் பயங்கரவாதிகளையும், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கலவரத்தை தூண்ட முயலும் குற்றவாளிகளையும் உடனே கைது செய்யாமல், அவர்களுக்கு போலிஸ் பாதுகாப்புடன் முழு அனுமதி கொடுத்துவிட்டு, அறத்தின் வழியே அமைதியாகப் போராட நினைக்கும் பாஜக-வினரை உடனுக்குடன் கைது செய்து ஒடுக்குவது பாசிசமேயன்றி வேறில்லை.
இவ்வாறு, அடக்குமுறைகளால் அறத்தை வீழ்த்திவிடலாம் என்று தப்புக்கணக்கு போடும் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் மக்கள் நலனை முன்னெடுக்கும் தேசியவாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகள் அல்ல.
எனவே, உங்கள் கைதுகளும் கைவிலங்குகளும் எங்கள் மனஉறுதியின் நிழலைக் கூட அசைத்துவிட முடியாது, இந்தக் களத்தில் நாங்கள் உள்ளவரை நீங்கள் என்னதான் முயன்றாலும் உங்கள் ஊழல் கறையை மறைத்துவிட முடியாது என்று பதிவிட்டுள்ளார்.