கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் கோட்டக்கல் மந்தாரத்தோடி என்ற பகுதியில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் (57). இவர் மார்ச் 17ஆம் தேதி நேற்று முன்தினம் இரவு தனது உறவினர்களான சமாந்தன், விசாலாட்சி, ருக்மணி, கிருஷ்ண பிரசாத் ஆகிய 4 பேரையும் பாலக்காட்டில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டிற்கு தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் பாலக்காடு நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது பாலகிருஷ்ணன் தனது செல்போனில் கூகுள் மேப் பார்த்தவாறு திருச்சூர் அருகே கொண்டாழி-திருவில்யா மலையை இணைக்கும் காயத்ரி ஆற்றின் குறுக்கே உள்ள எழுண்ணுள்ளத்து கடவு பாலம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மேப்பை பார்த்து தவறாக கார் திசை மாறி ஆற்றை ஒட்டி சாலையோரம் கட்டப்பட்ட தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கார் வேகமாக ஆற்றினுள் பாய்ந்தது. இதன் பின்னர் கார் நீரில் மூழ்க தொடங்கியுள்ளது. இதனை கவனித்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஆற்றில் குதித்து காரினுள் இருந்தவர்களை ஒருவர் பின் ஒருவராக 5 பேரையும் மீட்டனர்.
ஆற்றில் தண்ணீர் சுமார் 5 அடி உயரத்திற்கு இருந்தது. நொடிப்பொழுதின் காரில் பயணம் செய்த 5 பேரும் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளனர். கார் பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் வேகமாக பாய்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிரேன் மூலம் ஆற்றில் மூழ்கிய காரை மீட்டனர். இதன் பின் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.