பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷொயப் மாலிக், இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சாவுடன் திருமணம் செய்துகொண்டு விவாகரத்தும் செய்துவிட்டார். திருமணமாகி 14 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து செய்த நிலையில், மகன் இஜான் மிர்சா மாலிக்கிற்கு இருவரும் பெற்றோராக செயல்பட்டு வருகிறார்கள். மகனை பார்த்துக்கொள்ள சானியா மிர்சாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், பலரும் ஷொயப் மாலிக் மகனுடன் அதிக நேரம் செலவிடவில்லை என விமர்சித்து வந்தனர். இதற்கு பதிலளித்த ஷொயப், “நான் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை துபாய் சென்று, மகனுடன் நேரம் செலவிடுகிறேன். நான் அவனை பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், அழைத்துவருவதும் என் கடமை” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரமலான் சிறப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஷொயப் மாலிக், ” நாங்கள் தந்தை-மகன் உறவாக இல்லை. அது ஒரு நண்பர்களின் உறவு. அவன் என்னை ‘bro’ என்று அழைக்கிறான், நானும் அவனை ‘bro’ என அழைக்கிறேன். ஒவ்வொரு நாளும் வீடியோ காலில் இணைந்து, நாங்கள் பல விஷயங்களை பேசுகிறோம். தந்தை மற்றும் மகன் உறவு இடைவெளியால் பாதிக்கப்படாத வகையில், என் பாசத்தையும் கவனத்தையும் மகனுக்கு வழங்க முயற்சி செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார். இந்த ஜோடி விவாகரத்து பெற்றாலும் மகனுக்காக ஒருமித்து பெற்றோராக செயல்பட முயன்று வருகிறார்கள்.