பஞ்சாபில் தாகூர் துவாரா கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், திடீரென கோவிலின் மீது வெடிகுண்டுகளை வீசினர். இதில் சுவரின் ஒரு பகுதி சேதமானது. அதோடு ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்தன. இது குறித்து கோவில் நிர்வாகம் அளித்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குண்டு வீசியவர்களை தேடி வந்தனர். அதோடு இந்த சம்பவத்தில் பாகிஸ்தானில் ஐ எஸ் ஐ அமைப்புக்கு தொடர்பு உள்ளதா என்பதை குறித்தும் காவல்துறையினர் விசாரணைத்து வந்தனர்.
இந்நிலையில் சந்தேகத்திற்குரிய 2 நபர்களை காவல்துறையினர் கண்காணித்தனர். அவர்களை ராஜ சான்சி பகுதியில் வைத்து பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அவர்கள் இருவரும் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலைமை காவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தற்காப்புக்காக அவர்களை சுட்டனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் அங்கிருந்து தப்பி ஓடினார். தப்பி ஓடிய குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.