சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப தயாராகி வருகிறார். எட்டு நாள் பயணமாக கடந்த ஜூன் 5-ஆம் தேதி சென்ற அவர் எதிர்பாராத நிகழ்வுகளால் அங்கே மாதக்கணக்கில் தங்க நேரிட்டது.
புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புகின்றார்.
அவர்களுக்குப் பதிலாக, தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் அங்கு பணிகளைத் தொடர்வார்கள்.
நாசா ஏற்கனவே அறிவித்தபடி, இந்திய நேரப்படி இன்று காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை நோக்கிய தங்களது பயணத்தை, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வரும் தொடங்கினார்கள்.
பயணம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹாக் மற்றும் ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் தங்கள் பொருட்களுடன் இருக்கைகளில் தயாராகும் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
அதற்கு முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்களுடன் உடன் பணிபுரிந்த மற்றும் புதிதாக இணைந்துள்ள வீரர்களுக்கு அவர்கள் விடை கொடுத்தனர்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் தத்தமது இருக்கைகளில் அமர்ந்து, தயாரானதும் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து பூமியை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. நாசா திட்டமிட்டிருந்தபடி, இந்திய நேரப்படி சரியாக காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் பிரிந்தது.
விண்கலம் தற்போது பூமியை நோக்கிய சுமார் 17 மணி நேர பயணத்தில் உள்ளது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேருடன் அந்த விண்கலம் இந்திய நேரப்படி நாளை (19/03/2025) அதிகாலை 3.27 மணிக்கு பூமியை வந்தடையும். இதற்கான நேரலையை இந்திய நேரப்படி நாளை (19/03/2025) அதிகாலை சுமார் 2.15 மணியளவில் நாசா தொடங்குகிறது.
சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் போயிங் ஸ்டார்லைனர் மூலமாக ஜூன் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். அவர்களுடன் பூமிக்குத் திரும்பும் ஹேக், கோர்புனோவ் ஆகிய இருவரும் 6 மாத பயணமாக ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் கடந்த செப்டம்பரில் அங்கு சென்றனர். திட்டக்காலம் நிறைவடைந்துவிட்டதால் அவர்களும் சுனிதா, வில்மோருடன் இணைந்து பூமிக்குத் திரும்புகின்றனர். அவர்களை பூமிக்கு அழைத்து வரும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் கலத்தில் 4 இருக்கைகள் உள்ளன.
டிராகன் கலம் பெருங்கடலில் எவ்வாறு இறங்கும்?விண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் பயணம் ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினரை சுமந்து வரும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் கலம் அதிவேகமாக பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும். அப்போது சுமார் 1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை அது தாங்க வேண்டியிருக்கும். சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் இருவரையும் இந்த அதீத வெப்பத்தில் இருந்து வெப்பப் பாதுகாப்புக் கவசங்கள் காத்து நிற்கும்.
புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்ததும் டிராகன் கலம் விரைவாகவே தனது வேகத்தை இழந்துவிடும். அப்போது, கலத்திற்குள் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வரும் புவி ஈர்ப்பு விசையைக் காட்டிலும் 4 மடங்கு அதிகமான ஈர்ப்பு விசையை எதிர்கொள்வார்கள்.
இறுதிக்கட்டத்தில் 4 பெரிய பாராசூட்கள் விரியும். அப்போது, கலத்திற்குள் இருக்கும் நால்வரும் அதிர்வை உணர்வார்கள். ஆனால், இந்த செயல்தான் டிராகன் கலம் தனது வேகத்தை குறைத்து, பெருங்கடலில் பாதுகாப்பாக இறங்க வழிவகுக்கும்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்புவது எப்போது என்பது குறித்த கால அட்டவணையை நாசா வெளியிட்டுள்ளது. (கீழே இந்திய நேரப்படி விவரங்கள் தரப்பட்டுள்ளன)
மார்ச் 18
காலை 8:15 மணி - சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் மற்ற குழுவினர் டிராகன் விண்கலத்திற்குள் சென்றார்கள்.
காலை 10:35 மணி - டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு பிரிந்தது (Undocking)
மார்ச் 19
அதிகாலை 2:15 மணி - பூமிக்கு திரும்புவதற்கான பயணம் NASA+ இல் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும்
அதிகாலை 2:41 மணி - விண்கலம் அதன் சுற்றுப்பாதையிலிருந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் (நேரம் தோராயமானது)
அதிகாலை 3:27 மணி - விண்கலத்தின் வேகம் குறைந்து, பாரசூட்டுகள் விரிக்கப்பட்டு பாதுகாப்பாக கடலில் இறங்கும் (நேரம் தோராயமானது)
காலை 05:00 மணி - பூமிக்கு அவர்கள் திரும்பிய பிறகு நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திப்பார்கள்.
சுனிதா லின் வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரர். கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் 'எக்ஸ்பெடிஷன் -14' குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதாவை நாசா சேர்த்துக் கொண்டது.
1965-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா. அவருடைய அப்பா தீபக் பாண்டியா, குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தீபக் பாண்டியா 1958-ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார்.
சுனிதாவின் அம்மா போனி பாண்டியா. சுனிதாவின் கணவர் மைக்கேல் வில்லியம்ஸ். அவரும் ஒரு விமானியாக பணியாற்றியவர். தற்போது அவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.
1998-ஆம் ஆண்டு நாசா சுனிதாவை விண்வெளி வீரராக தேர்வு செய்தது. சுனிதா அமெரிக்க கடற்படை அகாடமியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் ஒரு திறமையான போர் விமானி என்று குறிப்பிடுகிறார் உள்ளூர் பத்திரிகையாளர் சலீம் ரிஸ்வி.
சுனிதா இதுவரை 30 வகையான விமானங்களை இயக்கியுள்ளார். அதில் அவர் 2700 மணி நேரம் பறந்த அனுபவத்தையும் பெற்றிருக்கிறார்.
படிப்பை முடித்த சுனிதா வில்லியம்ஸ் கடற்படையில் விமானியாக தன்னுடைய பணியை துவங்கினார்.
சுனிதா வில்லியம்ஸ் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார். இதன் மூலம், விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண்மணி என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஆனால் இது சுனிதாவின் முதல் வரலாற்று சாதனை அல்ல. 2006-07 ஆண்டில் தனது முதல் விண்வெளி பயணத்தின் போது, அவர் 29 மணி நேரம் 17 நிமிடங்கள் விண்வெளியில் நடந்தார்.
இதுவே இதுவரை ஒரு பெண் பதிவு செய்த மிக நீண்ட விண்வெளி நடையாகும். மேலே குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் அவர் நான்கு முறை விண்வெளியில் நடந்துள்ளார்.
முன்னதாக இந்த சாதனை விண்வெளி வீராங்கனை கேத்தரின் வசமிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் 21 மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளி நடையை மேற்கொண்டு சாதனை புரிந்திருந்தார்.
இது சுனிதா வில்லியம்ஸின் மூன்றாவது விண்வெளிப் பயணம். மூன்று பயணத்திலும் சேர்த்து மொத்தமாக ஒன்பது முறை விண்வெளியில் நடந்துள்ளார் சுனிதா. இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 62 மணி நேரம் 6 நிமிடங்களை அவர் விண்வெளி நடையில் செலவிட்டுள்ளார்.
2013-ஆம் ஆண்டு மாணவர்களிடம் உரையாற்றும் போது, சுனிதா விண்வெளிக்கு சமோசாக்களை எடுத்துச் சென்றதாகக் கூறியிருந்தார். இதனுடன், உபநிடதங்கள் மற்றும் கீதையையும் படிக்க எடுத்துச் சென்றதாக குறிப்பிட்டார்.
இந்திய உணவைப் புகழ்ந்து பேசிய அவர், இந்திய உணவுகளைப் பார்த்து யாருக்கும் சலிப்பே ஏற்படாது என்றார்.
அமெரிக்க அரசாங்கத்தின் தரநிலைப்படியே நாசாவிலும் சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் விண்வெளி வீரர்களுக்கான (civilian astronauts) GS-13 மற்றும் GS-15 தர ஊதியமும் அடங்கும்.
அமெரிக்காவில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் GS-01 முதல் GS-15 வரையிலான தர ஊதியத்தின்படி சம்பளம் வழங்கப்படுகிறது. GS-15 தர ஊதியம் என்பது இங்கு மிக அதிகமான சம்பளத்தை குறிக்கிறது.
இந்த தரநிலைப்படியே சுனிதாவும் சம்பளம் பெறுகிறார்.
GS-13: இந்த பிரிவில் ஆண்டுக்கு $81,216 முதல் $105,579 வரை (தோராயமாக ரூ. 70 லட்சம் முதல் 92 லட்சம் வரை) சம்பளம் வழங்கப்படுகிறது.
GS-14: இந்த பிரிவில் ஆண்டுக்கு $95,973 முதல் $124,764 வரை (தோராயமாக ரூ.83 லட்சம் முதல் ஒரு கோடியே 8 லட்சம் வரை) சம்பளம் வழங்கப்படுகிறது.
GS-15: இந்த பிரிவில் ஆண்டுக்கு $112,890 முதல் $146,757 வரை (தோராயமாக ரூ.98 லட்சம் முதல் ஒரு கோடியே 27 லட்சம் வரை) சம்பளம் வழங்கப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு