சென்னை மாவட்டம் அண்ணா நகர் மேற்கு 17வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மருத்துவரான பாலமுருகன் என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதியினருக்கு ஜஸ்வந்த் குமார், லிங்கேஷ்குமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். சுமதி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி பாலமுருகன் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது பாலமுருகன் தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக 25-க்கும் மேற்பட்ட வங்கிகளில் 8 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியது தெரியவந்தது. அதில் மூன்று கோடியை திருப்பி செலுத்தி விட்டார். மீதமுள்ள 5 கோடி ரூபாயை செலுத்த முடியாததால் சில நபர்களிடம் கந்துவட்டிக்கு 8 கோடி ரூபாய் பணத்தை வாங்கி மாதம் தோறும் 25 லட்ச ரூபாய் வட்டி செலுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்ததால் பாலமுருகன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது வட்டிக்கு பணம் கொடுத்தவர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களை கண்டுபிடிப்பதற்காக ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பாலமுருகனின் வீட்டை சோதனை செய்ததில் முக்கிய ஆவணங்கள், வங்கியில் கடன் பெற்ற ஆவணங்கள், பல்வேறு நபர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கிய விபரங்கள் அடங்கிய டைரி கிடைத்துள்ளது.