கேரள மாநிலம் இடுக்கி தொடுபுழாவைச் சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன் (27). இவர் ‘ஸீட் சொசைட்டி’ என்ற பெயரில் பாதி விலைக்கு ஸ்கூட்டர், லேப்டாப், வீட்டு உபயோக பொருட்கள், விவசாய உபகரணங்கள் வழங்குவதாகக்கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்துள்ளார்.
இந்த நிலையில், ‘பணம் வாங்கிவிட்டு ஸ்கூட்டர் வழங்கவில்லை’ என மூவாற்றுப்புழாவைச் சேர்ந்த சிலர் போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அனந்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இவரது பின்னணியில் சாயி கிராமம் டிரஸ்டின் நிர்வாகியான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கே.என்.அனந்த குமார் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கே.என்.அனந்தகுமார் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய ஆப்பரேஷன் செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இந்த நிலையில் பாதிவிலைக்கு ஸ்கூட்டர் வழங்குவதாக மோசடி நடந்தது குறித்து கேரள சட்டசபையில் எதிர்கட்சியான காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், "பாதிவிலைக்கு பொருள்கள் வழங்குவதாக நடந்த மோசடி சம்பந்தமாக 1343 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதில் 665 வழக்குகல் கிரைம் பிராஞ்ச்-க்கு மாற்றப்பட்டுள்ளன. 231 கோடி ரூபாய் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்படுள்ளது. மோசடியில் 48,384 பேர் பணத்தை இழந்துள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்படுள்ளன. என்.ஜி.ஓ கான்பரேசன் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் கூடுதல் விபரங்கள் வெளியே வரும். முதலில் பணம் கொடுத்தவர்களுக்கு பாதி விலைக்கு ஸ்கூட்டர் உள்ளிட்டவை கொடுத்துள்ளனர். அடுத்தகட்டமாக பணம் கொடுத்தவர்களை ஏமாற்றி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அரசு உள்ளது. சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் முடிந்த பின்னரே பணம் திருப்பி வழங்குவது குறித்த விஷயங்கள் பற்றி கூறமுடியும்" என்றார்.