முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்ட ஒரே மாதத்திற்குள் மருந்துகள் தட்டுப்பாடு- டிடிவி தினகரன்
Top Tamil News March 18, 2025 11:48 PM

முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்ட ஒரே மாதத்திற்குள் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் அறிவித்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து அவசரகதியில் திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. 

ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருந்துகளை மலிவான விலையில் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதயதெய்வம் அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களை முடக்கிவிட்டு, முதல்வர் மருந்தகங்களை திறந்து அதனையும் பயன்பாடற்ற நிலையில் வைத்திருப்பது திமுக அரசின் அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது. எனவே, இனியும் அவசரகதியிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும் திட்டங்களை தொடங்குவதை நிறுத்திவிட்டு அம்மா மருந்தகங்கள் போன்ற மக்களின் மகத்தான ஆதரவு பெற்ற திட்டங்களை தொடர்ந்து நடத்திட முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.