Malavika Mohanan : `` அம்மா, இந்தப் புகைப்படங்கள் எவ்வளவு அரிதானவை" - மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி
Vikatan March 18, 2025 11:48 PM

புகைப்படங்களை பிலிம் ரோலில் எடுப்பது எப்போதும் சிலருக்கு அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும்! அப்படியான புகைப்படங்களை பொக்கிஷங்களாகப் பலரும் பாதுகாப்பார்கள். டிஜிட்டல் உள்ளங்கையில் அனைத்தையும் கொண்டு வந்தாலும் இந்த பிலிம் புகைப்படங்கள் பலருடைய மனதில் நீக்கமற இடத்தைப் பிடித்திருக்கும். அப்படி நடிகை மாளவிகா மோகனன் தன் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அப்பா அவருடைய சிறு வயதில் எடுத்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் பதிவில் மாளவிகா மோகனன்,`` முன்பெல்லாம் என் அப்பா என்னையும் என்னுடைய அம்மாவையும் வைத்து அழகான புகைப்படங்களை எடுப்பார். அதில் பெரும்பாலான புகைப்படங்கள் திரைப்படங்களின் ஃப்ரேம் போலவே இருக்கும். என்னுடைய இளமை காலத்தில் இந்தப் புகைப்படங்கள் எவ்வளவு அரிதானது, எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை அப்போது நான் உணரவில்லை. ஏனென்றால், இந்தப் புகைப்படங்களை சுற்றிதான் நான் வளர்ந்தேன். ஒவ்வொரு குடும்பங்களும் இப்படியான புகைப்படங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இப்போது எல்லாமே டிஜிட்டலுக்கு மாறிவிட்டது. என் அப்பாவும் இப்போது எங்களைப் புகைப்படங்கள் எடுப்பதை நிறுத்திவிட்டார். டிஜிட்டலில் அந்தப் புகைப்படங்களில் ரொமான்ஸ் இல்லாததைப் போல அவருக்கு தோன்றியிருக்கலாம். இப்போதும் புகைப்படங்கள் எடுப்பது மிகவும் சுலபமாகிவிட்டது. நாமும் சுலபமான விஷயங்களை செய்வதை நிறுத்திவிட்டோம். என் அப்பா இப்படியான பிலிம் புகைப்படங்களை மிஸ் செய்திருக்கலாம்.'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.