நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி காட்டுவோம்: ராகுல் காந்தி பதிவு
Webdunia Tamil March 18, 2025 11:48 PM


தெலுங்கானா மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பை எடுத்துக்காட்டுவோம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், தற்போது அங்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, பிற்படுத்தப்பட்டோருக்கு 29 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று காங்கிரஸ் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அத்துடன், அறிவியல் பூர்வமாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, உண்மையான சமூக நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். சாதி வாரி கணக்கெடுப்பு டேட்டாக்களை பயன்படுத்தி, ஒவ்வொரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், அனைவரின் நல்வாழ்வையும் உறுதி செய்யும் வகையில் கொள்கைகள் வகுப்பதாகவும், இதற்கான குழுவையும் தெலுங்கானா அரசு அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"தெலுங்கானா காட்டிய வழியில் நாடு முழுவதும் பின்பற்றி, அனைத்து மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பை நிச்சயமாக நாங்கள் நடத்தி காட்டுவோம்" என ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்துள்ளார்.

Edited by Siva
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.