இந்தியா புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்க காத்திருக்கிறது... பிரதமர் மோடி சுனிதா வில்லியம்ஸிற்கு கடிதம் மூலம் அழைப்பு!
Dinamaalai March 19, 2025 12:48 AM

 சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் விண்வெளியில் சிக்கிக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் இன்று அங்கிருந்து பூமிக்கு புறப்பட்டுள்ளார். தொடர்ந்து 9 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரையும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவதற்கு நாசா உடன் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இணைந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டது. மார்ச் 14 ம் தேதி இரவு 7 மணிக்கு அவர்கள் இருவரையும் மீட்க புளோரிடாவில் இருந்து க்ரூ டிராகன் விண்ணில் புறப்பட்டு சென்றது.


அதில், அன் மெக்லெய்ன் (நாசா), நிக்கோல் ஏயர்ஸ் (நாசா), டாகுயா ஓனிஷி (ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் – ஜாக்சா), கிரில் பெஸ்கோவ் (ரோஸ்கோஸ்மோஸ் – ரஷ்யா) என மொத்தம் 4 பேர் பயணம் செய்ததாகவும், இன்று மார்ச் 18, SpaceX Crew Dragon விண்கலத்தின் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தற்போது புறப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

எனவே, பல தடைகளை தாண்டி இருவரும் அமெரிக்க கிழக்கு நேரப்படி (ET): மார்ச் 18, 2025, மாலை 5.57 மணி (PM), இந்திய நேரப்படி (IST), மார்ச் 19, 2025, அதிகாலை 3.27 மணிக்கு பூமியில் டிராகன் விண்கலம் மூலம் தரையிறங்கவுள்ளார்கள். இது புளோரிடா கடற்கரையில் விண்கலம் பாரசூட்டுகள் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கும் தோராயமான நேரமாகும். உலகமே அவர்கள் பூமிக்கு திரும்புவதை பார்க்க ஆவலுடன் காத்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரவேண்டும் என விருப்பப்பட்டு அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ” இந்திய மக்களின் சார்பில் நான் இந்த நேரத்தில் உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். சமீபத்தில் நான் பிரபல விண்வெளி வீரர் திரு. மைக் மாசிமினோவை சந்தித்தேன். அப்போது உங்களுடைய பெயரும் வந்தது அப்படியே உங்களை பற்றியும் பேசினோம்.

நான் அமெரிக்காவிற்கு வருகை தந்தபோது ட்ரம்ப் மற்றும் பைடன் இருவரிடமுமே உங்களுடைய உடல்நலம் எப்படி இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்துகொள்வேன். உங்களுடைய சாதனைகளை பார்த்து 1.4 பில்லியன் இந்தியர்கள் எப்போதும் பெருமைபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், கூட நீங்கள் தொடர்ந்து எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக தான் இருக்கிறீர்கள். மறைந்த தீபக்பாயின் ஆசீர்வாதங்களும் உங்களுடன் இருக்கும் என்று நான் நம்புகிறேன். 2016 ம் ஆண்டு நான் அமெரிக்காவிற்குச் சென்றபோது அவரை உங்களுடன் சந்தித்ததை நான் அன்புடன் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்.

நீங்கள் திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பது மகிழ்ச்சியாக இருக்கும். உங்களுடைய இந்திய வருகைக்கும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” எனவும் இந்தியாவுக்கு அழைப்புவிடுக்கும் வகையில் பிரதமர் மோடி அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.