மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களாகக் கருதப்படுவோரின் இடங்களிலும் டாஸ்மாக் அலுவலகங்களிலும் நடத்தப்பட்ட அமலாக்கத் துறையின் சோதனைகளில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் இருப்பதைக் கண்டறிந்ததாகச் சொல்கிறது அமலாக்கத் துறை.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக எதிர்க்கிறார் செந்தில் பாலாஜி. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?
கடந்த மார்ச் 6ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் அமலாக்கத் துறை பல இடங்களில் சோதனை நடத்தியது. கரூர் மாவட்டத்தில் பொதுப் பணித் துறையின் ஒப்பந்ததாரர் எம்.சி. சங்கர் ஆனந்த், கார்த்தி, சுப்பிரமணி ஆகியோரது இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தியது.
அதேபோல, சென்னை எழும்பூரில் சி.எம்.டி.ஏ. கட்டடத்தில் இருந்த டாஸ்மாக் அலுவலகம், சென்னை தியாகராய நகரில் இருந்த இரு மதுபான நிறுவனங்களின் அலுவலகங்கள், எழும்பூரில் இருந்த ஒரு மதுபான நிறுவனத்தின் அலுவலகம், அம்பத்தூரில் இருந்த ஒரு டாஸ்மாக் கிடங்கு உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. மொத்தமாக 25 இடங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.
தமிழ்நாட்டில் மது விற்பனையை TASMAC எனப்படும் Tamilnadu State Marketing Corporation Ltd நிறுவனம்தான் நடத்துகிறது.
இந்த நிறுவனத்தின் கீழ் 4,800க்கும் மேற்பட்ட சில்லறை மதுபான விற்பனைக் கடைகளும் 200க்கும் மேற்பட்ட 'எலைட்' எனப்படும் உயர் ரக மதுபானக் கடைகளும் 500க்கும் அதிகமான மனமகிழ் மன்றங்களும் இயங்குகின்றன.
அவற்றுக்குத் தேவையான மது வகைகளை, 'டாஸ்மாக்' நிறுவனம்தான் கொள்முதல் செய்து சப்ளை செய்கிறது. இந்த மதுபானங்கள், தமிழ்நாட்டிற்குள் இயங்கும் 18 மதுபான தயாரிப்பு நிறுவனங்களில் இருந்தும், ஸ்காட்ச் விஸ்கி போன்ற சில மதுபான வகைகளை வேறு மாநிலங்களில் இயங்கும் உற்பத்தி நிறுவனங்களில் இருந்தும் வாங்கி விநியோகிக்கப்படுகின்றன.
ஏற்கெனவே அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறையின் வழக்குகள் இருக்கும் நிலையில், தற்போது நடந்த இந்தச் சோதனைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சோதனையில் என்ன விவரங்கள் கிடைத்தன என்பது குறித்து அமலாக்கத் துறை தகவல்கள் எதையும் வெளியிடாத நிலையில், மார்ச் 13ஆம் தேதி தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக-வின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, மதுபான ஊழலில் ஆயிரம் கோடி ரூபாய் திமுக-வுக்கு கைமாறியுள்ளதாகத் தெரிவித்தார்.
"டெல்லியிலும் சட்டீஸ்கரிலும் நடந்த மதுபான ஊழல் அந்த அரசுகளை வெளியேற்றிவிட்டது. தமிழ்நாட்டில் நடந்த மதுபான ஊழலில் 1,000 கோடி ரூபாய் திமுகவுக்கு கைமாறியுள்ளது" என்று குற்றம்சாட்டினார்.
இதற்குப் பிறகு, அன்றைய தினமே அமலாக்கத் துறையும் இந்தச் சோதனைகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "டாஸ்மாக்கில் நடந்த பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணைகளை நடத்தியது.
டாஸ்மாக் கடைகளில் அதிகபட்ச சில்லரை விலையைவிடக் கூடுதல் விலை வசூலிக்கப்படுவது, ஆர்டர்களை பெற மதுபான நிறுவனங்கள் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது, டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களை நியமிக்கவும் இடமாற்றம் செய்யவும் டாஸ்மாக் உயரதிகாரிகள் லஞ்சம் வாங்குவது ஆகியவை குறித்தே இந்த முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன," என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும், டாஸ்மாக் அலுவலகங்களில் நடந்த சோதனையில், டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரை அதிகம் வசூலிப்பதில் மூத்த அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது, சில மதுபான நிறுவனங்களுக்கு மட்டும் ஆர்டர்கள் வழங்கப்பட்டிருப்பது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சில விவரங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை,
கூடுதலாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரக்கூடிய பல்வேறு குற்றங்கள் நடந்திருப்பதை இந்தக் கண்டுபிடிப்புகள் உணர்த்துவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
"எஸ்என்ஜே, கால்ஸ், அக்கார்ட், SAIFL, ஷிவா டிஸ்டில்லரி ஆகிய மதுபான ஆலைகளிலும், தேவி பாட்டில்ஸ், க்ரிஸ்டல் பாட்டில்ஸ், ஜிஎல்ஆர் ஹோல்டிங் ஆகிய பாட்டில் நிறுவனங்களிலும் நிதி ரீதியான முறைடு நடந்திருப்பது தெரிகிறது.
கணக்கில் வராத பணம் திரட்டப்பட்டு இருப்பதோடு, சட்டவிரோதமாக பலருக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. பாட்டில் நிறுவனங்களின் மூலம் போலியான பர்ச்சேஸ் ஆணைகள் பெறப்பட்டு, மதுபான நிறுவனங்கள் செலவுகளை அதிகரித்துக் காட்டியுள்ளன. இதன் மூலம் கணக்கில் வராமல் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரப்பட்டிருக்கிறது. டாஸ்மாக்கில் இருந்து கூடுதலான ஆணைகளைப் பெற இந்தக் கணக்கில் வராத பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது," என்று அமலாக்கத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதோடு, "விற்பனைத் தொகையை அதிகரித்துக் காட்டுவதில் பாட்டிலிங் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. பாட்டிலிங் நிறுவனங்களுக்கு மதுபான நிறுவனங்கள் கூடுதல் தொகையை அளித்த பிறகு, அந்தத் தொகையைப் பணமாக எடுத்து கமிஷனை கழித்துக் கொண்டு, மீதிப் பணத்தை மதுபான நிறுவனங்களுக்கே பாட்டிலிங் நிறுவனங்கள் வழங்கியுள்ளன.
அதிகரித்துக் காட்டப்பட்ட, போலியான செலவுகளின் மூலம் கணக்கில் வராத பணத்தை உருவாக்கக்கூடிய ஒரு நெட்வொர்ட் இருப்பதை இந்தக் கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன. இது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன" என்று அமலாக்கத் துறையின் அறிக்கை கூறுகிறது.
ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்துள்ளார்.
"ஆயிரம் கோடி ரூபாய் என்பதை முன்னதாக ஒருவர் (பாஜகவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை) சொல்கிறார். பின்னர் அமலாக்கத் துறை அதே ஆயிரம் கோடி என்ற கருத்தை முன்வைக்கிறது. இதில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியுள்ளன" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், "டாஸ்மாக் சோதனைகளை, டாஸ்மாக் நிறுவனம் சட்டப்படி எதிர்கொள்ளும். கொள்முதலைப் பொறுத்தவரை கடைசி 3 மூன்று மாத விற்பனை மற்றும் கடைசி மாத விற்பனை ஆகிய இரண்டின் சராசரியை வைத்துத்தான் டாஸ்மாக் நிறுவனம் ஆர்டர்களை வழங்குகிறது. கொள்முதலில் சலுகைகள் ஏதும் இல்லை," என்று குறிப்பிட்ட செந்தில் பாலாஜி, அறிக்கை வெளியிடப்பட்ட காலகட்டம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
"அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்று எத்தனை நாட்கள் ஆகின்றன. இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஏன் நேற்று மாலை அவசர அவசரமாக அந்த அறிக்கையை வெளியிடுகிறார்கள்? பட்ஜெட்டின் முக்கியத் திட்டங்கள் பற்றிய செய்திகளை மறைக்க இதைச் செய்கிறார்கள்" எனக் குற்றம் சாட்டினார் அவர்.
மேலும், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் சோதனைகளை நடத்தியிருப்பதாகச் சொல்லும் அமலாக்கத் துறை எந்தக் காலகட்டத்தில் அந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதை ஏன் சொல்லவில்லை எனக் கேள்வி எழுப்பினார் செந்தில் பாலாஜி.
"ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்களின் அடிப்படையில் ரெய்ட் நடத்தினோம் என்கிறார்கள், அது எந்தெந்த எப்ஐஆஃர், அவை எந்த ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டவை என்பதைச் சொல்ல வேண்டுமல்லவா?
சில கடைகளில் கீழ் நிலை ஊழியர்கள் தவறு செய்வதாகத் தகவல்கள் வந்த நிலையில், அது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. அது தொடர்பாக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த முதல் தகவல்கள் அறிக்கைகளை வைத்துக்கொண்டு, மேல் மட்டத்தில் தவறுகள் நடந்திருப்பதாக எப்படிச் சொல்ல முடியும்?" என்கிறார் அவர்.
செந்தில் பாலாஜி சொல்வதைப் போல் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்தச் சோதனைகளை நடத்தியதாக அமலாக்கத் துறை குறிப்பிட்டாலும், அவை எந்தெந்த வழக்குகள் என்பதைத் தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக 2016ஆம் ஆண்டில் இருந்து சுமார் 45 வழக்குகளை மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ளது.
இதில் பெரும்பாலான வழக்குகள், டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றது, லஞ்சம் பெற்றுக்கொண்டு உயரதிகாரிகளோ, கண்காணிப்பாளர்களோ அப்படி கூடுதல் விலைக்கு விற்க அனுமதித்தது தொடர்பான வழக்குகள்தான்.
இந்த வழக்குகளில், பெரும்பாலான வழக்குகள் 2016 -21 காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டவை. 2021க்குப் பிறகு சுமார் 10 வழக்குகளே டிவிஏசி-யால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டாஸ்மாக்கில் உள்ள பிரச்னைகள்இருந்தபோதும் டாஸ்மாக்கில் எல்லாம் சரியாக இருப்பதாகச் சொல்ல முடியாது என்கிறார் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திருச்செல்வம்.
"பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் அமலாக்கத் துறை காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், டாஸ்மாக்கில் உள்ள பிரச்னைகளை ஏன் யாரும் கண்டுகொள்வதில்லை?" என கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து பேசிய திருச்செல்வம், "அ.தி.மு.க. ஆட்சியின்போது டாஸ்மாக் நிறுவனத்தின் பணியார்களைப் பணி நியமனம் செய்வது, இடமாற்றம் செய்வது, அட்டைப் பெட்டிகளை விற்பது, பாட்டில்களை விற்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடக்கின்றன எனப் பல போராட்டங்களை நடத்தினோம்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இப்போது கூடுதல் தலையீடுதான் இருக்கிறது" என்று கூறினார்.
டாஸ்மாக்கின் கீழ் இயங்கும் 4000க்கும் மேற்பட்ட கடைகளில் சுமார் 2,900 கடைகளில்தான் உரிமம் பெற்று பார்கள் இயங்குகின்றன, ஆனால் பல இடங்களில் உரிமங்களே இல்லாமல் பார்கள் இயங்குகின்றன என்று கூறும் அவர், இதை அதிகாரிகள் சோதனையிட்டு மூடியிருக்க வேண்டும் என்றார்.
"அதேபோல, மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு முன்பாகவே அதை ஒட்டியுள்ள மதுபானக் கூடங்களைத் திறக்கிறார்கள். 2023ஆம் ஆண்டு மே மாதம் தஞ்சாவூரில் இப்படித்தான் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு முன்பாகவே மதுபானக் கூடத்திற்குச் சென்று மது அருந்திய 2 பேர் இறந்து போனார்கள். இதையெல்லாம் அதிகாரிகள் ஏன் சோதிப்பதில்லை?" எனக் கேள்வியெழுப்புகிறார் திருச்செல்வம்.
மேலும், மதுபானங்களைக் கொள்முதல் செய்யும் முறை மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
"மதுபானங்களைக் கொள்முதல் செய்வதில், முந்தைய விற்பனையை வைத்து கொள்முதல் செய்வதாகச் சொல்கிறார்கள். ஆனால், வேறு வழியில்லாதபோது மது பிரியர்கள் டாஸ்மாக்கில் என்ன கிடைக்குமோ அதைத்தானே வாங்க வேண்டியுள்ளது!
அப்படி அவர்கள் வேறு வழியில்லாமல் வாங்குவதை வைத்து, மீண்டும் அதே பானங்களைக் கொள்முதல் செய்கிறார்கள். ஆகவே, மது அருந்துவோர் விரும்பும் பானங்கள்தான் கொள்முதல் செய்யப்படுகின்றன என்பது சரியான வாதமல்ல" என்கிறார் திருச்செல்வம்.
மேலும், எந்தக் கட்டமைப்பும் இல்லாத மனமகிழ் மன்றங்களுக்கு பார் நடத்த அனுமதி அளிப்பது குறித்தும் கேள்வியெழுப்பும் திருச்செல்வம், டாஸ்மாக் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை ஒன்றை தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.
ஆனால், டாஸ்மாக் பணியாளர்கள் இடமாற்றம் போன்றவற்றில் பெரிய அளவில் முறைகேடு நடப்பதில்லை என்கிறார் டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் எம். சிவப்பிரகாசம்.
"டாஸ்மாக்கில் 25 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். பல தருணங்களில் அவர்களுக்கு இட மாறுதல் தேவைப்படலாம். தொழிற்சங்கத்தின் மூலமாக அதைச் செய்து தரச் சொல்லிக் கேட்பார்கள். நாங்களும் அதைச் செய்துகொடுப்போம். நாங்கள் மட்டுமல்ல, அனைத்து தொழிற்சங்கங்களுமே அதற்கு முயல்வார்கள். அப்படியிருக்கும்போது இடமாற்றத்திற்கு யார் பணம் கேட்க முடியும்?" என்று கேள்வியெழுப்புகிறார்.
அதேபோல, மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவது பற்றிக் குறிப்பிட்ட எம். சிவப்பிரகாசம், "சில இடங்களில் அப்படி நடக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் என்ன என்பதையும் பார்க்க வேண்டும். மதுபான கொள்முதலைப் பொறுத்தவரை, எந்தப் பகுதியில் கடைகள் இருக்கின்றனவோ, அந்தப் பகுதியைப் பொறுத்து விலை உயர்ந்த அல்லது விலை குறைவான மதுபானங்கள் விற்பனைக்குக் கொடுக்கப்படும். இதில் பெரிதாக ஏதும் செய்ய முடியாது" என்கிறார்.
ஆனால், இந்த விவகாரத்தை பாஜக இதோடு விடுவதாக இல்லை. 'டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய்க்கு ஊழல்' என்ற கோஷத்தை முன்வைத்து மாநிலம் முழுவதும் திங்கட்கிழமையன்று பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
முன்கூட்டியே தேதிகளை அறிவிக்காமல் தொடர்ந்து இந்த விவகாரத்தை முன்வைத்துப் போராட்டங்களை நடத்தப் போவதாகக் கூறியுள்ளார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு