ஆந்திர பிரதேசம் சித்தூர் மாவட்டம், கும்மரகுண்டாவை சேர்ந்தவர் 50 வயதான சுப்ரமணியம் மற்றும் மனைவி சாரதா.சுப்பிரமணியத்திற்கு 20 வயதாக இருந்தபோது முதல் முறையாக பாம்பு கடித்தது. அதன் பிறகு கூலி வேலைக்கு செல்லும் போதெல்லாம் வருடத்திற்கு 4 முதல் 5 தடவை பாம்புகள் கடித்தன.
இதில் ஒவ்வொரு முறையும் பாம்பு கடிக்கும் போதும் உயிர் பிழைப்போமா என்று கவலையடைந்தார். மேலும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.இந்த பாம்பு கடிக்கு பயந்து சுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்து,அங்கு கட்டிட வேலை செய்தார்.
அங்கும் பாம்புகள் கடித்ததனால் விரக்தியடைந்த சுப்பிரமணியம் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார்.அடிக்கடி பாம்புகள் விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்த சுப்ரமணியம், ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை தொடர்ந்து செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.
சொந்த ஊருக்கு திரும்பிய சுப்பிரமணியம் அங்குள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார். நேற்று முன்தினம் கோழி பண்ணையில் வேலைசெய்து கொண்டிருந்தபோது மீண்டும் ஒரு பாம்பு வந்து சுப்பிரமணியத்தை கடித்ததுள்ளது. அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு சுப்பிரமணியம் தற்போது குணமடைந்து வருகிறார்.
இதுகுறித்து அவரது மனைவி சாரதா கூறுகையில்,"எனது கணவரை டஜன் கணக்கில் பாம்புகள் கடித்துள்ளன. ஒவ்வொரு தடவை பாம்பு கடிக்கும் போதும் வெளியில் கடன் வாங்கி சிகிச்சை பெறுவதும் மீண்டும் கூலி வேலை செய்து கடனை அடைப்பதே எங்கள் வாழ்க்கையில் சுமையாக மாறிவிட்டது" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.இனியாவது பாம்பு கடியில் இருந்து தப்பிக்க முடியுமா? என்ற கலக்கத்தில் சுப்பிரமணியின் குடும்பத்தினர் உள்ளனர்.