வண்டிப்பெரியாறு: அச்சுறுத்திய புலி மீது துப்பாக்கிச்சூடு; வனத்துறை மீதான குற்றச்சாட்டும் விளக்கமும்!
Vikatan March 19, 2025 01:48 AM

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் என்பது அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டது. அதில் கரடி, புலி, காட்டெருமை, காட்டு யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் சர்வ சாதாரணமாக உலா வருவதும் வழக்கமாகும்.

புலி

இந்நிலையில் தமிழர்கள் அதிகம் வசித்துவரும் வண்டிப்பெரியார் அருகேயுள்ள க்ராம்பி என்ற இடத்தில் கடந்த ஒரு வார காலமாகவே புலி ஒன்று நடமாடி வருவதைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர். அதுமட்டுமன்றி வீடுகளில் உள்ள கால்நடைகளையும் வேட்டையாடி வந்தது.

இதனிடையே வனத்துறையினர் கேமரா பொருத்தி கண்காணித்து வந்த நிலையில், கூண்டு அமைத்து புலியை பிடிக்க முயற்ச்சித்தனர். ஆனால் புலி வைக்கப்பட்ட கூண்டில் சிக்கவில்லை. தொடந்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர்.

வனத்துறை

அப்பொழுது புலி தேயிலை தோட்டத்தில் பதுங்கிவாறு வனத்துறையினரை தாக்கியது. வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் புலி உயிரிழந்தது. இதற்கிடையே வனத்துறையினர் சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்பட்டதே புலி இறப்பதற்க்கு காரணம் என விலங்குகள் நல ஆர்வர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினரிடம் விசாரித்தோம். ``வண்டிப்பெரியாறு பகுதியில் உயிரிழந்த ஆண் புலிக்கு 8 வயது ஆகிறது. இந்த புலி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து ஆடுகளையும், நாய்களையும் வேட்டையாடி வந்தது. வனத்துறையினரால் தொடர்ச்சியாக கண்காணிப்பில் இருந்தது. அந்தப் புலி கம்பீரமாக இருந்தாலும் கூட மிகவும் சோர்வாக காணப்பட்டது. அதன் காலில் காயம் இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

வனத்துறை

புலி நடமாட்டம் இருந்ததால் க்ராம்பி பகுதியில் 144 தடை உத்தரவு போட்டிருந்தோம். சுமார் 20 அடி தூரத்தில் இருந்த புலிக்கு மயக்கமருந்து ஊசி செலுத்த முற்பட்டபோது வனக்காவலர் ஒருவரை புலி தாக்கியது. அதிலிருந்து தப்பிக்கவே தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.