உதகை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.70 கோடியில் பூங்கா - புதிய மரங்களை வளர்த்தால் ஈரநிலம் வீணாகிவிடுமா?
BBC Tamil March 19, 2025 02:48 AM
Spl Arrangement சர்வதேச சுற்றுலா நகரமாகவுள்ள உதகை நகரின் நடுவில், 54 ஏக்கர் பரப்பளவில் நீள்வட்டமாக அமைந்துள்ளது ரேஸ்கோர்ஸ்

உதகை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.70 கோடி மதிப்பில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ், அந்தப் பகுதியில் கட்டடங்கள் எதையும் கட்டாமல், ஈரநிலமாகவே பாதுகாக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

இப்போது வரையிலும் இதற்கான முன்மொழிவு எதுவும் தோட்டக்கலைத் துறைக்கு வரவில்லை என்பதால், இந்தப் பூங்கா எந்தத் துறையால் எப்படி அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

சர்வதேச சுற்றுலா நகரமாகவுள்ள உதகை நகரின் நடுவில், 54 ஏக்கர் பரப்பளவில் நீள்வட்டமாக அமைந்துள்ளது ரேஸ்கோர்ஸ். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து குதிரைப் பந்தய மைதானமாக இருந்து வந்த இந்த நிலம், வருவாய்த் துறையால் ஊட்டி ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்குத் தரப்பட்டு, பின்பு மெட்ராஸ் ரேஸ் கிளப் கைக்கு மாறியது.

இதில் ஒவ்வோர் ஆண்டும் கோடைக் காலத்தின்போது, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும் குதிரைப் பந்தயங்கள் நடைபெறுவது வழக்கமாக இருந்தது. இந்த நிலத்துக்கான குத்தகைத் தொகை உள்பட தமிழக அரசுக்கும், மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கும் இடையே பல்வேறு வழக்குகள் நடந்து வந்தன.

'மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகை பாக்கி ரூ.822 கோடி'

வழக்குகளில் குறிப்பிடப்பட்ட விவரங்களின்படி, கடந்த 1979ஆம் ஆண்டில் குத்தகை ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. அதன் பின்னும் அரசுக்கு குத்தகைத் தொகை செலுத்தப்பட்டு வந்தது. கடந்த 2002ஆம் ஆண்டில் இருந்து குத்தகைத் தொகை உயர்த்தப்பட்டது.

இது தொடர்பாகவும் தனியாக வழக்கு நடந்து வந்த நிலையில் கடந்த 2017 ஜூலை மாதத்துடன் வருடாந்திர குத்தகை வாடகைத் தொகைக்கான காசோலையை தமிழக அரசின் வருவாய்த்துறை பெற மறுத்துவிட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டில், ரேஸ்கோர்ஸ் மைதானத்திலுள்ள 4 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் முயற்சியில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் இறங்கியது. அதற்கு எதிராகவும் மெட்ராஸ் ரேஸ் கிளப் வழக்கு தொடுத்தது.

அதன் பின் 2018ஆம் ஆண்டில், உயர்நீதிமன்றத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியரால் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ரூ.642 கோடி குத்தகை பாக்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தொகை ரூ.822 கோடியாக உயர்ந்துவிட்டதாக 2023 ஜூன் 30 அன்று தமிழக அரசின் வழக்கறிஞரால் உயர்நீதிமன்றத்தில் தகவல் தரப்பட்டது.

இந்தத் தொகை இதுவரை செலுத்தப்படாத நிலையில், ரேஸ்கோர்ஸ் இடத்தை முழுமையாக எடுத்துக் கொள்வதற்கு தமிழக அரசுக்கு அனுமதியளித்து கடந்த 2024 ஜூன் 21 அன்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, 2024 ஜூலை 6ஆம் தேதியன்று, நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலரால், ரேஸ்கோர்ஸ் கட்டடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, இடம் முழுமையாக மீட்கப்பட்டு, அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது.

அந்த இடத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று, தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் உதகை ரேஸ்கோர்ஸ் பகுதியில் 52 ஏக்கர் பரப்பளவில் ரூ.70 கோடி மதிப்பில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் குறித்து எந்தத் தெளிவான திட்டமும் வெளியிடப்படாத நிலையில், பூங்கா எப்படி அமையும் என்றும் அதன் அமைவியலில் இருக்கும் சவால்கள் குறித்தும் சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சுற்றுச்சூழல் பூங்கா எப்படி அமைய வேண்டும்? Getty Images

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை வரவேற்றுள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சில அறிவிப்புகளை அறிவியல் மனப்பாங்குடன் அணுகி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உதகை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பூவுலகின் நண்பர்கள், ''நீலகிரி மாவட்டத்தில் கோடைக் காலங்களில் ஏற்படும் வறட்சியைக் கருத்தில் கொண்டு இந்த 52 ஏக்கர் பகுதியை நீர்நிலையுடன் கூடிய பூங்காவாக மாற்றும் சாத்தியங்களை ஆராய வேண்டும்'' என்று கூறியுள்ளது.

ஒரு காலத்தில் இந்த ரேஸ்கோர்ஸ் பகுதியும், உதகை ஏரியின் ஒரு பகுதியாக இருந்ததைச் சுட்டிக்காட்டும் தோடர் நல்வாழ்வு சங்கத்தின் நிறுவனரும், சூழலியல் செயற்பாட்டாளருமான மருத்துவர் தருண் சோப்ரா, இதை மீண்டும் நீர்நிலையாக மாற்றுவதைவிட, ஈரநிலமாக (wet land) பாதுகாப்பதே நல்லது என்று வலியுறுத்துகிறார்.

ஈரநிலங்களில் விளையும் தாவரங்களை மட்டும் அங்கு வளர்க்க வேண்டுமே தவிர, சுற்றுச்சூழல் பூங்கா என்ற பெயரில் வேறு மரங்களை நட்டால் அது வீணாகிவிடும் என்கிறார் அவர்.

''உதகையும் தோடர்களின் மந்துவாகத்தான் (தோடர்கள் வாழும் கிராமம்) இருந்தது. தோடர் மந்துகள் பெரும்பாலும் நாலு புறமும் மலைகள் சூழ்ந்தும், நடுவில் ஈர நிலங்களுடனும் இருக்கும். தோடர் மொழியில் அதை 'பத்தேர்' என்பார்கள். அதில் வளரும் அவுல் என்ற புல்லை வைத்தே தோடர்கள் கோவிலில் வழிபடுவார்கள். இப்போது கோரகுந்தா பகுதியில் மட்டுமே அவுல் இருக்கிறது.

அத்தகைய அழிவுக்குள்ளான ஈரநிலத் தாவரங்களை, ரேஸ்கோர்ஸ் புல்வெளிக்கு நடுவில் வளர்க்கலாம். சுற்றிலும் உள்ள பாதையை ஒட்டி, ஈரநிலங்களுக்கு அருகில் வரும் மரங்களை வளர்க்கலாம்'' என்கிறார் மருத்துவர் தருண் சோப்ரா.

வெள்ளத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஈரநிலங்கள் Spl Arrangement ஈரநிலத்தைச் சுற்றிலும் கான்கிரீட் கட்டுமானங்களை உருவாக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறார் தருண் சோப்ரா

பெருமழைக் காலங்களில் பொழியும் மழை நீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை இந்த ஈரநிலங்களுக்கு இருப்பதால், வெள்ளத்தைக் கட்டுப்படுத்த இந்த நிலம் உதவும் என்று கூறுகிறார் தருண் சோப்ரா. எனவே, இந்த ஈரநிலத்தைச் சுற்றிலும் கான்கிரீட் கட்டுமானங்களை உருவாக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

இதே கருத்தை வலியுறுத்தும் உலக காட்டுயிர் நிதியத்தின் சூழலியல் ஆய்வாளர் மோகன்ராஜ், ஈரநிலத் தாவரங்களுடன் சோலை மரங்களையும் நடலாம் என்றும் ஆலோசனை தெரிவிக்கிறார்.

இங்கு தற்போதுள்ள புல்வெளியிலுள்ள பூச்சிகளைத் தேடி ஏராளமான பறவைகள் வருவதால், அவற்றை வேட்டையாடும் காட்டுப்பூனை (Jungle cat), சிறுத்தைப் பூனை (Leopard cat) ஆகியவை அதிகளவில் இருப்பதாகக் கூறுகிறார், காட்டுயிர் ஆய்வாளர் மொய்னுதீன்.

நீலகிரியின் பல பகுதிகளில் இவற்றின் வாழ்விடம் அழிந்து வரும் நிலையில், உதகை நகரின் நடுவில் வாழும் இவற்றின் வாழ்விடத்தை அதே நிலையில் வைப்பதற்கு ஈரநிலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.

இப்படி பல தரப்பிலும் பல கருத்துகள் சொல்லப்படுவதால், ரேஸ்கோர்ஸ் பகுதியில் முதலில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, அதன் அடிப்படையில் சுற்றுச்சூழல் பூங்காவுக்கான திட்டத்தை வகுக்க வேண்டுமென்று சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

புதிய கட்டுமானங்கள் தொடர்பான அச்சம் Spl Arrangement எந்தக் கட்டுமானத்தையும் அனுமதிக்காமல் இருந்தால் உண்மையாகவே அது சுற்றுச்சூழல் பூங்காவாக இருக்கும் என்கிறார் சிவதாஸ்

பூங்காவுக்கு ரூ.70 கோடி ஒதுக்கப்படுவதால், கட்டுமானங்கள் உருவாக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகப் பலரும் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் சமூக அறக்கட்டளை நிறுவனரும், தேசிய பசுமைப் படையின் ஒருங்கிணைப்பாளருமான சிவதாஸ், ''ரேஸ்கோர்ஸ் இருந்தபோதும், புல்வெளியும், ஈரநிலமும் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன. பூங்கா அமைக்கும் திட்டத்துக்காக இதைப் பாழ்படுத்தக்கூடாது. ஏற்கெனவே உதகை கான்கிரீட் காடாகிவிட்டது. நகரில் பெய்யும் மழையைத் தேக்கி வைக்க இந்த ஈரநிலம் பெரிதும் உதவும். நிலத்தடியின் வழியாக இது உதகை ஏரியைப் பாதுகாக்கும்'' என்கிறார்.

ஏற்கெனவே உதகை ஏரிக்கு தண்ணீர் தரும் கோடப்பமந்து கால்வாயில் கழிவுநீர் அதிகமாகிவிட்டதாலும், ஏரிக்கான நீர் வரத்து குறைந்து வருவதாலும் இன்னும் சில ஆண்டுகளில் ஏரியே அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக சிவதாஸ் எச்சரிக்கிறார்.

நீர்நிலையாக மாற்றுவதைவிட, அதைத் தற்போதுள்ள நிலையில் ஈரநிலமாகவே பாதுகாக்க வேண்டும் என்பதால், எந்தக் கட்டுமானத்தையும் அங்கே அனுமதிக்காமல் இருந்தால் உண்மையாகவே அது சுற்றுச்சூழல் பூங்காவாக இருக்கும் என்கிறார் அவர்.

பூங்கா எந்தத் துறையால் அமைக்கப்படும்? Getty Images உதகையில் தற்போதுள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவை தோட்டக்கலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது

ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஈரநிலங்களில் உள்ள தாவரங்கள், பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், அங்கு வரும் பறவைகள் அனைத்துமே, அரிதானவை என்பதால் அதை அப்படியே பாதுகாப்பது ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்று நம்பும் சிவதாஸ், "குளிர்காலங்களில் பனியைத் தாங்கும் திறந்தவெளி நிலங்களும் அழிந்து வருவதால் அந்த வகையிலும் இதைப் பாதுகாப்பது மிகமிக அவசியம்" என்கிறார்.

ஒரு தேநீர்க் கடையை அங்கே அனுமதித்தாலும் சூழல் மாசு துவங்கிவிடும் என்கிறார் அவர். கடந்த ஆண்டில் ரேஸ்கோர்ஸ், வருவாய்த் துறையினரால் மீட்டெடுக்கப்பட்டபோது, அங்கு சுற்றுச்சூழல் பூங்கா பணிகளைத் துவக்குவதற்கு, தோட்டக்கலைத் துறையிடம் ஒப்படைப்பதாக நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது தமிழக பட்ஜெட்டில் ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டமே தோட்டக்கலைத் துறையால் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

உதகை நகரில் தற்போதுள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவை, தோட்டக்கலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சுற்றுச்சூழல் பூங்காவை அமைக்கும் பணி, தமிழக வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும் வாய்ப்புள்ளதாகப் பெயர் கூற விரும்பாத ஐஎஃப்எஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதற்கேற்ப இந்தப் பணி தோட்டக்கலைத் துறையிடமும் ஒப்படைக்கப்படவில்லை என்றார் அவர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, ''ரேஸ்கோர்ஸ் பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணியை, தோட்டக்கலைத் துறையிடம் ஒப்படைப்பதாக எந்தத் தகவலும் இதுவரை வரவில்லை. இந்த அறிவிப்பு வேளாண் பட்ஜெட்டிலும் வரவில்லை. அதனால் யாரிடம் ஒப்படைப்பார்கள் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை'' என்றார்.

அரசு அறிவித்துள்ள சுற்றுச்சூழல் பூங்காவுக்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதால், கட்டுமானங்கள் அமைக்கப்படுமோ என்ற அச்சம், பிபிசி தமிழிடம் பேசிய அனைத்து சூழல் ஆர்வலர்களிடமும் வெளிப்பட்டது. இந்தப் பூங்கா எப்படி அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகளவில் இருப்பதாகச் சொல்கிறார் நீலகிரி தோடர் நல்வாழ்வு சங்கத்தின் நிறுவனர் தருண் சோப்ரா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.