'டாஸ்மாக்' ஊழலையே மிஞ்சி விடும் 'மனை பிரிப்பு' ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாவட்ட நகர் ஊரமைப்பு இயக்குனரக(DTCP) அனுமதியின் பேரில் மாற்றப்படுகிறது. அந்த மனைகளுக்கு சதுர அடி கணக்கில் மதிப்பு நிர்ணயம் செய்வதில் லஞ்ச முறைகேடுகள் சொல்லி மாளாது. ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மனைகளை பிரிக்க சதுர அடி நிர்ணயம் செய்யக்கோரி மாவட்ட பதிவாளர்களுக்கு விண்ணப்பம் செய்தால் அதற்கென தனி தொகையை ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், அந்த லஞ்சமும் மனையை வாங்குவோரின் கொள்முதல் விலையில் சேர்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த மனைகளை பிரிப்பதற்கு முன்னரே ஒரு ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே மனைகளுக்கு விலை நிர்ணயம் (லஞ்சம் பெற்றுக்கொண்டு) செய்ய வேண்டும் என்ற 'திராவிட மாடல்' உத்தரவு இருப்பதாக பதிவர்கள் புலம்புகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதாவது பிரித்த மனைகளுக்கு விலை நிர்ணயம் (Price Fixation) செய்வதற்கு லஞ்சம் என்றிருந்த நிலை தொடரும் அதே நிலையில், மனைகளை பிரிப்பதற்கு முன்னரும் லஞ்சம் என்ற 'திராவிட மாடல்' உருவாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இதனால், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் திக்கி திணறி போனாலும், இறுதியில் அதிக விலை கொடுத்து வாங்கும் கட்டாயத்திற்கு பொது மக்களே ஆளாகிறார்கள். 'டாஸ்மாக்' ஊழலையே மிஞ்சி விடும் 'மனை பிரிப்பு' ஊழல். அமலாக்கத்துறையின் பார்வை பத்திரப்பதிவு துறையின் மீது செலுத்தப்படுமா? என குறிப்பிட்டுள்ளார்.