உத்தர பிரதேசத்தின் கவுரிபுரா பகுதியைச் சேர்ந்த பெண் முஸ்கான் ரஸ்தோகி, 27. இவர், வர்த்தக கப்பல் அதிகாரியாக பணிபுரிந்த சவுரப் ராஜ்புத், 29, என்பவரை 2016-ல் காதல் திருமணம் செய்தார்.
இரு வீட்டார் எதிர்ப்பால், மீரட்டின் இந்திரா நகரில் வாடகை வீட்டில் வசித்தனர். 2019-ல் பெண் குழந்தை பிறந்த பின், ஷகில், 25, என்பவருடன் முஸ்கானுக்கு பழக்கம் ஏற்பட்டது.
கப்பலிலேயே மாதக்கணக்கில் சவுரப் பணியில் இருந்தது, முஸ்கானுக்கு வசதியாக இருந்தது. சவுரப் வேலை செய்த கப்பல், கடந்த மாதம் லண்டன் வந்தது.
மனைவி முஸ்கானின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த சவுரப், திடீரென லண்டனில் இருந்து புறப்பட்டு கடந்த பிப்., 24-ல் உ.பி., வந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த முஸ்கான், சவுரபை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
கடந்த 4ம் தேதி, கணவருக்கு உணவில் துாக்க மருந்து கலந்து கொடுத்தார். அவர் மயங்கியதும் காதலன் ஷகிலுடன் சேர்ந்து, கத்தியால் 15 துண்டுகளாக சவுரபை வெட்டிக் கொன்றார்.
பின்னர், பெரிய டிரம்மில் அந்த துண்டுகளை போட்டு மூடி, சிமென்டால் பூசினார்.
சவுரபை காணாமல், அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது, அவர் மணாலி சென்று விட்டதாகவும், தானும் செல்ல இருப்பதாகவும் கூறிய முஸ்கான், எதுவுமே நடக்காதது போல் கள்ளக் காதலனுடன் மணாலி சென்றார்.
அங்கிருந்தபடியே, கொலையை மறைப்பதற்காக, சவுரபின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிலேயே ஏராளமான படங்களை முஸ்கான் பதிவிட்டுள்ளார். ஆனால், சவுரபை மொபைல்போனில் அவரது குடும்பத்தினர் தொடர்பு கொண்டால், யாரும் எடுக்கவில்லை.
சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே, 10 நாட்களுக்கு மேல் திறக்கப்படாமல் கிடந்த முஸ்கான் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம்பக்கத்தினர் போலீசில் தெரிவித்தனர்.
போலீசார், கதவை உடைத்து வீட்டினுள் சென்று, டிரம்மை அறுத்து பார்த்தபோது, அழுகிய நிலையில் சவுரப் உடல் பாகங்கள் கிடந்தன. இதையடுத்து, முஸ்கானையும், ஷகிலையும் தேடிய போலீசார், நேற்று அவர்களை கைது செய்தனர்.
இருவரிடமும் விசாரித்தபோது, சவுரபை திட்டம்போட்டு கொன்று டிரம்மில் அடைத்ததை ஒப்புக் கொண்டனர்.
கொலையை மறைக்க மணாலியில் சுற்றியதாகவும் தெரிவித்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.