அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து... டிரைவர் உள்ளிட்ட 4 பேர் படுகாயம்!
Dinamaalai March 20, 2025 06:48 PM

கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி நாற்கர சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரையில் இருந்து நெல்லைக்கு நள்ளிரவில் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்தை நெல்லை கொக்கிரகுளத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜாஸ்டீபன் என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்தில் 10 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து ராஜாபுதுக்குடி அருகே தனியார் நிறுவனம் பகுதியில் அதிகாலை 2 மணியளவில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நாற்கர சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தின் ஓட்டுநர், பயணிகளான சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி முத்துக்குமாரசாமி (55), மதுரை காமராஜர் சாலை ஜீவாஆனந்த் (74) உள்ளிட்ட 4பேர் படுகாயம் அடைந்தனர். கண்டக்டர் உள்ளிட்ட மற்ற பயணிகள் லேசான காயங்களுடன் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று பேருந்தில் பலத்த காயங்களுடன் இருந்த பயணிகளை மீட்டு சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் சாலையோர பள்ளத்தில் உருகுலைந்து கிடந்த அந்த அரசு பேருந்து பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.