Toda Tribe: ``ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து செய்கிறோம்.." வியக்க வைக்கும் பழங்குடி பாரம்பர்யம்!
Vikatan March 20, 2025 05:48 PM

பழங்குடிகளின் தாய் நிலமான நீலகிரி மலையில் இருளர், குறும்பர், பணியர், காட்டு நாயக்கர், கோத்தர், தோடர் என 6 வகையான பண்டைய பழங்குடியின மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு இனக்குழுவினரும் தங்களுக்கே உரித்தான உணவு, உடை, மொழி, வழிபாடு, இசை, நடனம் பழக்கவழக்கங்கள் போன்றவற்றை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.

தோடர் பழங்குடிகள்

குளிர் நிறைந்த நீலகிரி மலை உச்சியில் வாழிடங்களை தகவைமைத்திருக்கும் தோடர் பழங்குடிகள் ஆயர் சமூகமாக அறியப்படுகின்றனர். உலகின் தனித்துவமான எருமை இனமாக அறியப்படும் தோடா எருமைகளை வளர்ப்பதை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். எருமைகளை அடிப்படையாகக் கொண்டே தோடர்களின் ஒட்டுமொத்த வாழ்வியலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. தோடர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை நடைபெறும் அனைத்து சடங்குகளிலும் பிரிக்க முடியாத அங்கமாகவே அவர்கள் வளர்க்கும் எருமைகள் பங்காற்றி வருகின்றது. தோடர்களின் குடியிருப்பு மற்றும் வழிபாட்டு தலங்களும் இந்த எருமைகளை மைய ஆதாரமாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மக்கள் பேசும் தொதவ மொழி அழியும் அபாயத்தில் இருப்பதாக எச்சரிப்பதைப் போலவே இந்த மக்களின் வாழிடமான தொதவ மந்துகளும் அழிந்து வருவதாக இந்த மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். ஒட்டுமொத்த தோடர் பழங்குடிகளின் தாய் மந்தாக போற்றப்படும் முத்தநாடு மந்து மற்றும் ஏனைய மந்துகளில் உள்ள வழிபாட்டு தலங்களை பாரம்பர்ய முறையில் இன்றளவும் பராமரித்து வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வழிபாட்டு தல புனரமைப்பை பெரிய திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

தோடர் பழங்குடிகள்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள மெல்காஷ் மந்தில் நடைபெற்ற வழிபாட்டுத் தல புனரமைப்பில் ஒட்டுமொத்த தோடர் பழங்குடி மந்தைச் சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து பாங்காற்றியுள்ளனர். இயற்கையில் கிடைக்கும் குறிப்பிட்ட ஒரு வகையைச் சேர்ந்த புற்கள், மூங்கில், மரப் பட்டைகள், கற்கள் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தி இந்த புனரமைப்பை மேற்கொண்டனர். அரிதான இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மானுடவியல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் இந்த பாரம்பர்யம் குறித்து பகிர்ந்த தோடரின மக்கள், " நாங்கள் உயிர் வாழ இந்த மலையையும் வாழ்வாதாரமாக எருமைகளையும் இயற்கை எங்களுக்கு பரிசளித்திருக்கிறது. மலைகள், ஆறுகள், மரங்கள், நட்சத்திரங்கள், நிலா, சூரியன், காற்று, மழை இவையே எங்களின் கடவுள். உருவ வழிபாடு கிடையாது. வளைவு வடிவ எங்களின் வழிபாட்டு தலத்திற்குள் ஒளியை மட்டுமே கடவுளாக வைத்து பாதுகாத்து வருகிறோம்.

தோடர் பழங்குடிகள்

இயற்கையில் கிடைக்கும் பொருள்களை மட்டுமே கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்களின் முன்னோர்களால் கட்டப்பட்ட புனித இடங்களை இன்றளவும் அதே முறையில் பராமரித்து வருகிறோம். உலகில் வேறெங்கும் காண முடியாத குறிப்பிட்ட ஒரு புற்களை முக்கூர்த்தி பகுதியில் இருந்து சேகரித்து வந்து இந்த புனரமைப்பை செய்கிறோம். கிட்டத்தட்ட 15 நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வால் பூமி செழித்து கால்நடைகளும் பெருகும் என்பது நம்பிக்கை. இதனை கொண்டாடும் விதமாக பாரம்பர்ய உடையில் நடனமாடி இயற்கைக்கு நன்றி தெரிவிக்கிறோம்" என்றனர்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : |

Part 02: |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.