கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது... பைக் பறிமுதல்!
Dinamaalai March 20, 2025 06:48 PM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களது மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் படி டிஎஸ்பி ஜெகநாதன் உத்தரவின் பேரில் நேற்று தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாரதி நகரில் ஒரு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினர்.

இதை பார்த்து சுதாரித்து கொண்ட போலீசார் துரத்தி சென்று மோட்டார் சைக்கிளுடன் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர். அவர்களை போலீசார் சோதனை நடத்தியபோது 2 பேரிடமும் 30 பொட்டலங்களில் 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து பிடிப்பட்ட 2 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்த ஆறுமுகவேல் மகன் சாந்தகுமார் (23) மற்றும் அதே பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் மாதவன் (24) என்பதும், அவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. அவர்கள் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த வாலிபர்களையும், கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை கோவில்பட்டி மேற்கு போலீசாரிடம், தனிப்படையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.