2025ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் முதல் போட்டியில் கடந்த முறை கோப்பை வென்ற கொல்கத்தா அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
இருப்பினும், பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பது, சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள மூன்றாம் போட்டிக்கே.
இடையே ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணிக்கு இடையேயான போட்டி அதே நாளில் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் 5 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்று இருந்தாலும், கடந்த சீசனில் இரண்டு அணிகளும் ப்ளே ஆஃபிற்கு தகுதி பெறாமல் வெளியேறின. இந்த ஆண்டு இந்த இரு அணிகளும் மெகா ஆக்ஷனில் பலமான அணியை எடுத்துள்ளன.
சேப்பாக்கம் ஆடுகளம் பெரும்பாலும் கடந்த காலங்களில் சுழல் பந்துக்குச் சாதகமாக இருந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு சென்னை அணி அஷ்வின், நூர் அகமது, ரச்சின் ரவிந்திரா போன்ற வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
கடுமையான சூழ்நிலையில் ஆட்டத்தைச் சென்னை அணிக்குச் சாதகமாகத் திருப்பும் திறனுடைய ஜடேஜா, துபே, பதிராணா, ருதுராஜ் போன்ற வீரர்கள் உள்ளனர்.
ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிகளில் சுழற்பந்துக்கு ஏற்றவாறு அணியை தேர்வு செய்யும்.
அவ்வாறான உத்தேச அணியில் ருதுராஜ், கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, துபே, ஜடேஜா, சாம் கரன், தோனி, அஷ்வின், நூர் அகமது/பதிராணா, கலீல் அகமது ஆகியோர் இடம்பெறுவார்கள்.
நூர் அகமது சுழற்பந்து வீச்சாளராக இருப்பதால், பதிராணாவுக்கு பதிலாக சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன.
சென்னை அணியில் கடந்த சீசனில் இருந்து ரச்சின் ரவீந்திரா இடம்பெற்று வருகிறார். காயம் காரணமாக கான்வே கடந்த ஐ.பி.எலில் பங்கேற்கவில்லை.
இதனால் ரவீந்திராவுக்கு அணியில் தொடக்க ஆட்டக்காரராக வாய்ப்பு கிடைத்தது. 10 போட்டிகளில் ஆடிய இவர் 160 ஸ்டிரைக் ரேட்டில் 222 ரன்களை குவித்தார்.
கடந்த சீசனில் இவரது பேட்டிங் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபியில் இவரது ஃபார்ம் சிறப்பாக இருந்ததால், இவரது மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மற்றொரு புறம் மூன்றாவது வீரராக இவர் களமிறங்க வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது. அந்த வரிசையில் ஆடிய ரெய்னா சிறப்பாக விளையாடி சென்னை அணிக்குப் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்தார்.
ரெய்னாவுக்கு கிடைத்தது போன்ற வாய்ப்பு தற்போது ரவீந்திராவுக்கு கிடைத்துள்ளது.
இரண்டு ஆண்டு தடைக்குப் பின், 2018ஆம் ஆண்டு சென்னை அணி ஐ.பி.எல் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் அம்பதி ராயுடு. இவர் அந்த தொடரில் 602 ரன்களை 150 ஸ்டிரைக் ரேட்டில் குவித்திருந்தார்.
நடு ஓவர்களில் களமிறங்கி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். ராகுல் திரிபாதியும் அதே வரிசையில் களமிறங்குவதால், சுழற்பந்து வீச்சாளர்கள் வீசும் பந்துகளை எதிர்கொள்ளும் சவாலான இடத்தில் இவர் ஆடவுள்ளார்.
2022ஆம் ஆண்டு ஐ.பி.எலில் இவர் ஹைதராபாத் அணிக்காக ஆடி, 413 ரன்களை குவித்தார். அதன்பின் இந்திய டி20 அணியிலும் இவர் இடம்பிடித்தார்.
2023ஆம் ஆண்டில் 273 ரன்களும், 2024ஆம் ஆண்டில் 165 ரன்களும் ஹைதராபாத் அணிக்காக குவித்தார்.
உலகமெங்கும் நடக்கும் டி20 கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ரஷீத் கான் முன்னணி வீரர்களில் ஒருவராக உள்ளார்.
அதற்கு காரணமாக இருப்பது அவரது பந்துவீச்சு ஆக்ஷன், அவர் பந்து வீசும் லைன் மற்றும் லெந்த். கிட்ட தட்ட அவரைப்போலவே பந்துவீசும் திறன் கொண்டவர்தான் நூர் அகமது.
இந்நிலையில், ஜடேஜா மற்றும் அஷ்வின் போன்ற ஜாம்பவான்களுடன், நூர் அகமதுவும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இணைந்து பந்து வீசினால், அது சென்னை அணிக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களில் சென்னை அணிக்கு விளையாடிய சாம் கரன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 14 போட்டிகள் விளையாடிய சாம் கரன் 131 ஸ்டைரைக் ரேட்டில் 186 ரன்களை குவித்தார். மேலும் 13 விக்கெட்களையும் எடுத்திருந்தார்.
2021ஆம் ஆண்டு சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை வென்ற போது, 4 இன்னிங்ஸ் பேட்டிங் ஆடிய சாம் கரன் 193 ஸ்டைரைக் ரேட்டில் 56 ரன்களை குவித்து, 9 போட்டிகளில் பந்துவீசி 9 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார்.
சென்னை அணிக்கு 2018 ஆம் ஆண்டு முதல் பெரும்பாலான போட்டிகளில் புதிய பந்தில் தீபக் சஹார் விக்கெட்களை வீழ்த்தி வந்தார்.
அவரை தற்போது மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அதனால், சென்னை அணிக்கு பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்த வேண்டிய முக்கிய பந்துவீச்சாளராக சாம் கரன் உள்ளார்.
மேலும், பேட்டிங்கிலும் போட்டியின் சிக்கலான தருணங்களில் இவர் ஆட வேண்டியிருக்கும் என்பதால், இவரது செயல்பாடு சென்னை அணியின் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக இருக்க வாய்ப்புள்ளது.
சென்னை அணியின் பலம்நிதானமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சேப்பாக்கம் மைதானத்தின் தன்மைக்கு ஏற்றவாறான அணியை சென்னை கொண்டுள்ளது.
தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ், கான்வே ஆகிய இருவரும் நிதானமாக ஆடி ரன்களை குவிக்கும் வல்லமை பெற்றவர்கள்.
ஷிவம் துபே மிடில் ஓவர்களில் சிறந்த ஸ்டைரைக் ரேட்டில் ரன் குவிக்கும் திறன் பெற்றுள்ளார்.
மேலும், தோனி, ரச்சின் ரவீந்திரா, ஜடேஜா, சாம் கரன் போன்ற பேட்டர்கள் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளனர்.
சுழற்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரையில், ஜடேஜா, அஷ்வின், நூர் ஆகிய மூன்று உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அணியில் உள்ளனர். புதிய பந்தில் சாம் கரன் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
முகேஷ் செளத்ரி, குர்ஜப்நீத் சிங், நாதன் எல்லீஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி ஆகியோரை உள்ளடக்கிய பலமான வேகப்பந்து வீச்சாளர்களை பின்னணியில் வைத்துள்ளது சென்னை.
பேட்டிங்கில், ருதுராஜ், கான்வே, திரிபாதி ஆகிய மூவரும் தொடக்கத்தில் குறைந்த ஸ்டைரைக் ரேட்டில் ஆடக் கூடியவர்கள். ஒருவேளை இவர்களின் விக்கெட்டை பவர்ப்ளேவுக்குள் சென்னை இழந்துவிட்டால், பின்னர் நடுவரிசை பேட்டர்கள் மீது அதிக அழுத்தம் ஏற்படும்.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு துபே திணற வாய்ப்புள்ளது. ஒருவேளை அவருக்குச் சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல், வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும் நிலை வந்தால், அவரின் ஸ்டைரைக் ரேட் குறையாமல் இருக்க வேண்டும்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை, பதிராணா கடந்த சீசனில் இருந்த ஃபார்மில் இல்லை. அவர் சமீப காலத்தில் தனது ஆக்ஷனை மாற்றியதால், லைன் மற்றும் லெந்தில் பந்துவீச முடியாமல் திணறி வருகிறார்.
புதிய பந்தில் யார் விக்கெட் எடுக்கப்போகிறார்கள் என்ற கேள்வியும் உள்ளது. ஒருவேளை பதிராணா அணியில் இடம்பெறா விட்டால், கலீல் அகமது உடன் யார் டெட் ஓவர்களில் பந்து வீசுவார்கள் என்ற கேள்வியும் உள்ளது.
இளம் வீரரான அன்சுல் கம்போஜை ருதுராஜ் எவ்வாறு பயன்படுத்துவார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இவர், ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.