கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகருக்கு நேற்று மாலை 5.25 மணிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பணியில் இருந்த உணவக ஊழியர் ஒருவருக்கும், ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் மோதலாக மாறியது. இவர்களுக்கு ஆதரவாக அவர்கள் பணிபுரியும் பிரிவைச் சேர்ந்த மேலும் 2 ஊழியர்கள் வந்து ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து இந்த ரெயில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கும், ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் பகுதிக்கும் இடையே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் விரைந்து சென்று ரெயில் நின்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக மோதலில் ஈடுபட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி, ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் பின்னர் 4 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த சம்பவம் காரணமாக சுமார் அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. ரெயிலில் பணி யாற்றிய ஊழியர்கள் மோதல் காரணமாக நடு வழியில் ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.