இந்தியை திணித்தால் மூன்றாவது மொழிப்போரை தொடங்குவோம்- கருணாஸ்
Top Tamil News March 25, 2025 10:48 PM

மூன்றாவது மொழியாக இந்தியை திணித்தால், மூன்றாவது மொழிப்போரை தொடங்குவோம் என முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தலைவர் கருணாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும், பணமே வேண்டாம் என தாய்மொழியை காப்போம் என்ற உறுதியை வலியுறுத்தினேன். இரண்டாயிரம் கோடி என்ன, பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டேன் இது பணப் பிரச்சினை அல்ல இனப் பிரச்சினை. நிதி தரவில்லை என இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெரும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல. தடைக்கற்கள் உண்டென்றால் அதை உடைத்தெறியும் தடந்தோள் உண்டென்று சொல்லும் திராவிட மாடல் ஆட்சி இது! என்று தமிழ்நாட்டு முதல்வர்கள் இன்று (25.03.2025) சட்டப்பேரவையில் மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் உரைத்துள்ளார்.

எப்படியாவது இந்தியை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தமிழ் ஆங்கில மொழியோடு மூன்றாவதாக இந்தியையும் இணைத்து, முதல் இடத்திற்கு நகர்த்தி இந்தியா முழுமையைக்கும் இந்தியா மயமாக்கும் ஒற்றைச் சிந்தனை வெறியோடு கங்கணம் கட்டி நிற்கிறது ஒன்றிய அரசு. அது ஒருபோதும் தமிழ்நாட்டில் நடக்காது!! எந்த தேசிய இனமும் தன் மொழிக்காக பலநூறு உயிர்களை ஈகம் செய்தது கிடையாது!! ஆனால் தமிழ்நாடு தமிழ்மொழிக்காக தீக்கு இரையாகியும், குண்டடிப்பட்டு, நஞ்சுண்டும் மாண்டும் தமிழ்மொழியை காத்துள்ளனர். அந்த வீரமறவர் இனத்தின் தீப்பந்தத் தொடர்ச்சி எப்போதும் கனலை கக்கிக் கொண்டே இருக்கும்.

இந்தி உள்ளிட்ட எந்தமொழியையும் கற்பதால் எங்களுக்கு எந்த சிக்கலும், இல்லை. இந்தியை சமற்கிருதம் உள்ளிட்ட மொழிகளை வலிந்து திணித்தால் நாங்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். ஏற்கெனவே இரண்டுமுறை மொழிப்போரை கண்டவர் ( 1930 – 1965) இனியும் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் எதேச்சதிகார அரசியல் நோக்கம் தலையெடுக்குமானால், மூன்றாவது மொழியாக முகமூடி போட்டுவரும் இந்தியை விரட்ட மூன்றாவது மொழிப்போரை தொடங்குவோம் என எச்சரிக்கை செய்வோம்! மொழிகாக்கும் நோக்கில் தொடர்ந்து களமாடும் முதல்வர் அவர்களின் செயல் பாராட்டத்தக்கது. வரவேற்கத்தக்கது. தினந்தோறும் இனமானம் காக்கும், சமகால அரசியல் போரில் சமராடும் முதல்வர் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.