அவமானங்கள், உறவினரின் அவமதிப்புகள் கடந்து சாதித்த கிருஷ்ணா! - குறுங்கதை | My Vikatan
Vikatan March 25, 2025 10:48 PM

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

கோயிலுக்கு அருகில் உள்ள கடை வீதியில் வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தாள் கலா. யாரோ தன் கைப்பையை பிடித்து இழுப்பதைப். பார்த்து திடுக்கிட்டு திரும்பினாள். அங்கே கிருஷ்ணா சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள்.

“கிருஷ்ணா எங்க போன? திடீரென்று அவளைப் பார்த்ததில் கலா சற்று சத்தமாக கேட்க சுற்றி இருந்தவர்கள் திரும்பி பார்த்தார்கள். “வீட்டுக்கு போய் முழுசா எல்லாத்தையும் சொல்றேம்மா” நம்ப ஆயம்மா நீங்க மார்கெட்டுக்கு போனதா சொன்னாங்க அதான் இங்க வந்தேன்” என்றபடியே சாமான் பைகளை வாங்கிக் கொண்டாள்.

கிருஷ்ணா ஒரு திருநங்கை. கலாவின் சம்பந்தி வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தாள். சம்பந்தி வீட்டினர் தங்கள் கிராமத்திலிருந்து கிருஷ்ணாவை விஜயவாடாவுக்கு உதவிக்காக அழைத்து வந்தனர். கிருஷ்ணா எல்லா வேலைகளையும் செய்வாள். சமையல் செய்வது அவளுக்கு பிடித்தமான வேலை. பிரமாதமாக சமைப்பாள்.

கலாவின் ஒரே மகள் ஹைதராபாதில் பிரபல மருத்துவமனையில் பிஸியோதெரபிஸ்டாக பணிபுரிகிறாள். மருமகனுக்கு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை. மகள் தன் திருமணத்திற்குப் பிறகு கிருஷ்ணாவை தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டாள். கலாவின் வீட்டுக்கும் அவள் அவ்வப்போது வருவாள்.

பண்டிகைகள், பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷங்களில் கிருஷ்ணா செய்யும் ஸ்பெஷல் உணவுகள் அவளின் கைமணத்தில் மிகவும் சுவையாக இருக்கும். அவள் செய்து தரும் சேமியா கேசரி.

பிரியாணி வகைகள் மிகவும் பிரபலம். கலாவின். அலுவலக நண்பர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் கிருஷ்ணாவை சமைத்து தரும்படி கேட்பார்கள். அதில் கிடைக்கும் ஊதியத்தை வங்கியில் சேமித்து வந்தாள்.   

நான்கு வருடங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாத தன் அம்மாவை பார்க்க கிராமத்துக்கு போனாள் கிருஷ்ணா. பிறகு ஊர் திரும்பவில்லை. அவள் கிராமத்திலும் இல்லை என செய்தி வந்தது. என்ன ஆனாள்? எங்கே போயிருப்பாள்? ஒரு விவரமும் தெரியவில்லை. நாள்கள் நகர்ந்தன. அவள் நினைவு அவ்வப்போது கலாவுக்கு வரும். நான்கு வருடங்களுக்குப் பிறகு இப்போது இதோ கலாவின் முன் நிற்கிறாள்.

 வீட்டினுள் வந்து சாமான் பையை வைத்துவிட்டு கலாவின் எதிரே  அமர்ந்தாள். “நான் இப்போ பூனாவில் வசிக்கிறேன்” என்றாள்.     

“அங்கு எதற்குப் போனாய்? என்ன செய்கிறாய்? ஏன் இங்கு வரவில்லை? கேள்விகளை அடுக்கினாள் கலா. கிருஷ்ணா தொடர்ந்தாள்.

“ என் அம்மாவ தன் கடைசி காலத்தில என் உடன் பிறந்தோர் யாரும் கவனிக்கல.. நான் தான் அவளுக்கு ஆதரவா இருந்தேன். எத்தனையோ கஷ்டங்கள். அவமானங்கள். உறவினரின் அவமதிப்புகள். சில மாதங்களில் அம்மாவும் இறந்து விட்டாள். என்ன செய்வதென்று தெரியாமல் அனாதையாக நின்ற என்னை நல்ல உள்ளம் படைத்த தூரத்து உறவினர் ஒருவர் தன் சமையல் தொழிலுக்கு உதவியாக இருக்க என்னை அழைத்தார்.

அந்த சமயம் என்னால் மறுக்க முடியவில்லை. அவர் பூனாவில் ஒரு பிரபல கம்பெனியின் ஊழியர்களுக்கு மதிய உணவு தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். என்னுடைய சமையல் திறமையால் அவருடைய தொழில் மேலும் முன்னேற்றமடைய என்னையும் பார்ட்னராக சேர்த்துக் கொண்டு கேடரிங் சர்வீஸைத் தொடங்கினார். கேடரிங் பிஸினஸ் நன்றாகப் போய்க் கொண்டிருக்கு.. பல பிரபலங்களின் வீட்டு விசேஷங்களிலும் இப்ப எங்க கேடரிங் சர்வீஸ் தான். எல்லாம் உங்க ஆசிர்வாதம் அம்மா" என்றாள். 

“டாக்டரம்மா, ஐயா எல்லோரையும் பார்க்கணும் போல இருந்தது அதான் வந்தேன். நாளைக்கு கிளம்பிடுவேன்”.

“அவங்க ஊரில இல்ல. வர ஒரு வாரமாகும்” நம்ப வீட்டு ஐயா இப்ப சாப்பிட வருவாரு” கலா சொன்னவுடன் “ இன்னிக்கு உங்களுக்கும் ஐயாவுக்கும் நான் தான் சமைச்சு போடப் போறேன்” சொல்லிவிட்டு உள்ளே போனவளை பெருமையுடன் பார்த்தாள் கலா.

தன்னம்பிக்கையும் மிடுக்குமாக இருந்த கிருஷ்ணா எட்ட முடியாத உயரத்தை அடைந்து சாதனை படைத்து விட்டாள். நம்மால் முடியும் என்ற எண்ணமே ஆற்றலைப் பெற்றுத்தரும்.. உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கை இருந்தால் பாலின வேறுபாடின்றி எவருக்குமே வாழ்க்கையில் முன்னேற்றமே. 

(உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது)

வி.ரத்தினா

ஹைதராபாத் 

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.