என் வானிலே! - 90ஸ் இளைஞரின் சிலிர்பனுபவம் | My Vikatan
Vikatan March 25, 2025 10:48 PM

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

நீண்ட நாட்களுக்குப் பிறகான ஒரு பேருந்துப் பயணம். சேலம் ஹைவே ரோடு. பகல் நேரத்து வெளிச்சம் மறையத் தொடங்கிய வேளை.

மனதில் ஆயிரமாயிரம் உணர்வுகள் சஞ்சரித்துக் கொண்டிருந்தன. 

வாழ்வின் முக்கிய ஒரு கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருந்த தருணம் அது. 

பேருந்து ஜன்னலின் வழியே தோன்றி மறையும் இயற்கையை ரசிக்க மனம் லயிக்க வில்லை.

மூச்சுக்காற்றை முதன்முறையாக கவனித்தேன். காய்ச்சல் அல்லாத உடலின் உஷ்ணத்தை முதன்முறையாக உணர்ந்தேன்.

அப்போது காற்றோடு கலந்து வந்த அந்த இசை, மொத்தமாக என் உணர்வுகளை மாற்றியது.

அதற்கு முன்பு பல முறை அந்தப் பாடலை கேட்டிருந்தாலும்...,

அன்று அந்த சூழலில், குழப்பமான ஒரு மன நிலையில்,கலப்படம் இல்லாத அந்த மாலை நேரத்தின் மத்தியப் பொழுதில் திரும்பவும் கேட்ட போது,

'....'

அந்த உணர்வை விவரிக்க வார்த்தைகள் தெரியாததால் அதை அப்படியே விட்டுவிடுகிறேன்.

ஆனால் இரண்டு முடிவுகளை மட்டும் அன்று எடுத்தேன்.

உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இளையராஜா.

உலகின் தலைசிறந்த பாடகி ஜென்ஸி.

அந்தப் பாடல்?

'என் வானிலே ஒரே வெண்ணிலா...'

*

தமிழ் சினிமாவின் சிறந்த பத்து பாடல்கள் என பட்டியலிட்டால், ஜானி திரைப்படத்தில் வரும் இப்பாடலுக்கு ஒரு தனி இடம் உள்ளது என்பது அடியேன் கருத்து.

இளையராஜாவுக்கு வழி விட்டு, கவிஞர்கள் ஓரமாய் நின்ற பாடல்களுள் இதுவும் ஒன்று. (இதில் ஓரமாய் நின்றவர் கவிஞர் கண்ணதாசன்)

பல்லவி, சரணம் என இரண்டும் சேர்ந்து, எட்டு வரிகளுக்குள் மொத்த பாடலும் முடிந்து விடும். ஆக, பாடல் முழுவதும் இளையராஜாவின் ராஜ்யம் தான்.

பியானோவையும் வயலினையும் கலந்து இப்படியெல்லாம் இசை கோர்க்க முடியுமா???

அப்பேருந்து பயணமே இப்பாடலைக் கேட்பதற்குத் தானா எனத் தோன்றியது!

என்னுள் இருந்த குழப்பங்கள் முழுமையாக நீங்கவில்லை என்றாலும், அந்நேரம் மனது இலகுவானது. 

அதன் பயன்? முக்கிய ஒரு முடிவைத் தெளிவாக எடுத்தேன்.

ஓர் இசை என்ன செய்யும்? ஓர் இளையராஜா என்ன செய்வார் என்பதற்கான எடுத்துக்காட்டு இது.

*

இளையராஜா

'எனது கற்பனைத் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் சினிமா, இதுவல்ல...' 

- இயக்குநர் மகேந்திரன்.

அப்போதைய தமிழ் சினிமா மீதான ஒரு வெறுப்பில் அதே சினிமாவுக்குள் வந்தவர், இயக்குநர் மகேந்திரன். யதார்த்த சினிமாவின் அடையாளம். 

சினிமா எனும் ஆழ் கடலில் பலர் முத்துக்களை சேகரித்த போது, கரையில் ஒதுங்கிய கிளிஞ்சல்களை கொஞ்சிக் கொண்டிருந்தவர்.

அப்படி அவர் சேகரித்த கிளிஞ்சல்களுள் ஒன்று 'ஜானி'.

மகேந்திரன்-ரஜினி-இளையராஜா! 

முள்ளும் மலருமில் அவர்கள் செய்த மேஜிக் மறைவதற்குள், அதே கூட்டணியின் அடுத்த படைப்பு.

இயல்பாகவே மகேந்திரனுக்கு கட்டாயமாக புகுத்தப்படும் பாடல்களின் மீது நம்பிக்கை இருந்ததில்லை.

மகேந்திரன் எழுதிய 'சினிமாவும் நானும்' புத்தகத்தில் தமிழ் சினிமா பாடல்களைப் பற்றி இப்படி எழுதியிருப்பார்:

'தமிழ் சினிமாவில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படும் சம்பிரதாய பாடல்களின் மீது எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. அது ஒரு திரைப்படத்தின் யதார்த்தத்தை முற்றிலும் கெடுக்கிறது. வேறு வழியில்லாமல் தான் என்னுடைய படங்களில் பாடல்களை சேர்க்கிறேன்...'

ஆனால்...இப்படிப்பட்ட மகேந்திரனுடைய படைப்புகளில் வந்த பாடல்கள் எல்லாமே இமாலய வெற்றி பெற்றது இயற்கையின் முரண். 

அதற்குப் பெரியளவில் உறுதுணையாக இருந்தவர்கள் ஒளிப்பதிவாளர்கள், பாலு மகேந்திராவும் அசோக் குமாரும். 

இவர்களது லென்ஸ், மகேந்திரனின் மனக் கண்களை பிரதிபலித்தன. 

இப்பாடலில் கூட முதல் சரணத்தின் முன்பு வரும் அந்த வயலின் இசையில் ரஜினியும் ஸ்ரீதேவியும் ஒரு மலைமேல் நின்று பியானோ வாசிப்பது போன்ற காட்சி வரும். இது யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டது.

ஆனாலும் இளையராஜாவின் இசை அங்கு முதன்மையாக இருப்பதால் யதார்த்தத்தை மீறிய அந்தக் காட்சி நமக்கொரு குறையாகத் தெரியாது.

*

மிகக்குறைந்த பாடல்களே பாடிய ஜென்ஸி யின் உச்சம் இந்தப் பாடல். ஆழ்ந்து கேட்டால் ஜென்ஸி யின் குரலுக்கும், இளையராஜாவின் வயலின் ஒலிக்கும் வித்தியாசமே தெரியாது.

அதிலும் அந்த வரி, 'நீ தீட்டும் கோலங்கள்...'!

பக்கமே இருந்து நம் தோளின் மீது கை வைத்து ஆறுதல் சொல்வதைப் போன்ற உணர்வைத் தரும் குரல்.

தனிப்பட்ட முறையில் அந்த வரி ஏதோ இளையராஜாவின் இசை பற்றியே கண்ணதாசன் எழுதியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. 

அதாவது இளையராஜா தீட்டும் இசை என்னும் கோலங்கள்.

*

இப்பதிவின் முதல் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் ஆகின்றன. அன்று முதல் இன்று வரை எனது ப்ளே லிஸ்டில் முதல் பாடலாக இருக்கும் பாடல் இந்த,

'என் வானிலே ஒரே வெண்ணிலா...'

-சரத் 

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.