ஜார்க்கண்ட் மாநிலம் பலாமூ மாவட்டத்தில் உள்ள பன்ஸ்திஹா வனப்பகுதியில் நடந்த திடீர் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் சட்டவிரோதமாக பாறைகள் வெட்டி எடுத்துவரப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, 16 வனக்காவலர்கள் நேற்று (மார்ச் 22) இரவு சோதனைக்கு சென்றனர். சோதனைக்குப் பிறகு, 2 டிராக்டர்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத பாறைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், அங்கு திரண்டிருந்த கிராமவாசிகள், பெண்கள் மற்றும் சிறுவர்களும் சேர்ந்துக்கொண்டு, வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் 5 வனக்காவலர்கள் படுகாயமடைந்து, மெதினிராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சத்ராப்பூர் காவல் துறை விசாரணை மேற்கொண்டு, தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயற்சி செய்து வருகிறது.