Ishan Kishan: 'எல்லாத்துக்கும் எங்க கேப்டன்தான் காரணம்' - செஞ்சுரிக்குப் பிறகு இஷன் கிஷன்
Vikatan March 24, 2025 04:48 AM

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. கடந்த சீசனை போலவே இந்த சீசனையும் அடிதடி பாணியில் தொடங்கியிருக்கிறது சன்ரைசர்ஸ் அணி. முதலில் பேட் செய்து 286 ரன்களை எடுத்திருக்கிறார்கள். ஐ.பி.எல் வரலாற்றில் 280+ ரன்களுக்கு மேல் சன்ரைசர்ஸ் எடுப்பது இது இரண்டாவது முறை. சன்ரைசர்ஸ் சார்பில் ஹெட்டும் இஷன் கிஷனும் அசத்தலான ஆட்டத்தை ஆடியிருந்தனர். இஷன் கிஷன் 47 பந்துகளில் 106 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 225. இதில் 11 பவுண்டரிக்களும் 6 சிக்சர்களும் அடக்கம்.

Ishan Kishan

இன்னிங்ஸூக்கு பிறகு இஷன் கிஷன் பேசியதாவது, ``எங்கள் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸூக்குதான் தலைவணங்கி நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். அணியின் அத்தனை வீரர்களுக்கும் அவர் சுதந்திரம் கொடுத்திருக்கிறார். நாங்கள் சதமடித்தாலும் பரவாயில்லை, டக் அவுட் ஆனாலும் பரவாயில்லை துணிச்சலாக சுதந்திரமான கிரிக்கெட்டை ஆடும் சுதந்திரத்தை அவர் கொடுத்திருக்கிறார்.

ரன்கள் சேர்க்க நாங்கள் எடுக்கும் முயற்சிகள்தான் முக்கியம் எனும் சூழல் அணியில் இருக்கிறது. அதற்காக அணி நிர்வாகத்துக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். இப்படி ஒரு சதத்தை அடிப்பேன் என்கிற நம்பிக்கை இருந்தது. இந்த இன்னிங்ஸ் ஒரு நல்ல உணர்வைக் கொடுக்கிறது.

Ishan Kishan

அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் ஆடிய விதத்தையும் பாராட்ட வேண்டும். அவர்களின் ஆட்டம்தான் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. அவர்கள் மீது அழுத்தம் ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் ஆடினோம். அடிப்படையான விஷயங்களை சரியாக செய்தாலே நாங்கள் வென்றுவிடுவோம்.' என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.