நடப்பு IPL 2025 சீசனில் மார்ச் 24ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, அக்சர் படேல் வழிநடத்தும் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரண்டு அணிகளும் புதிய கேப்டன் தலைமையில் களமிறங்குவதால் போட்டி மீது ரசிகர்களுக்கு தனியான எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக டெல்லி அணிக்கு தலைமை வகித்து வந்த ரிஷப்பை எதிரணி அணியின் கேப்டனாக பார்க்கும் சந்தர்ப்பம் இது.
இந்த போட்டிக்கு முன்பாக டெல்லி அணிக்கு தொடர்ந்து பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், தனிப்பட்ட காரணங்களால் தொடரிலிருந்து விலகியதுடன், BCCI தரப்பில் அவருக்கு 2 வருட தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஹாரி புரூக், வீரர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என BCCIயை எதிர்த்து கருத்து தெரிவித்திருக்கிறார். இதனால் எதிர்கால ஏலங்களில் ஹாரி புரூக்கை BCCI புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மற்றுமொரு பக்கம், டெல்லியின் முக்கிய வீரரான கே.எல்.ராகுல், தனது மனைவி அதியா நிறைமாத கர்ப்பமாக இருப்பதால், தொடக்க போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்த இரட்டை பின்னடைவு, டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேலுக்கு பெரும் சவாலாக உருவாகியுள்ளது. இந்நிலையில், தனது அணியை ஒருங்கிணைத்து எப்படி வெற்றிக்கே வழி வகுப்பார் என்பது தற்போதைய IPL தொடரில் டெல்லியின் வெற்றிப் பயணத்தை தீர்மானிக்கக்கூடிய முக்கிய அம்சமாக இருக்கிறது.