ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட IPL 2025 சீசன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு அணியும் சமூக வலைதளங்களில் ரசிகர்களை வித்தியாசமான முறையில் உற்சாகப்படுத்தி வரும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெளியிட்ட ஒரு வீடியோ கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லரை பேட்டி எடுத்து வெளியிட்ட வீடியோவில், அவரை கடந்த தோல்விகள் குறித்து தொடர்ச்சியாக கேள்விகள் கேட்டு, அவரது உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்துகொண்டது, பலரின் கண்டங்களை பெற்றுள்ளது.
மில்லர் பேட்டியில், “IPL-ல் உங்களை அதிகம் பாதித்த தோல்வி எது?” என்ற கேள்விக்கு “2023 IPL பைனல்” என பதிலளிக்கிறார். இதைத் தொடர்ந்து அவரிடம் கேட்ட மற்ற கேள்விகளும் தென் ஆப்பிரிக்கா அணியின் முக்கியமான தோல்விகளை குறித்தவையாக இருந்தன. கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்தும் தோல்வியடைந்த வலி மறக்கமுடியாததாக இருந்தபோது, இதுபோன்ற கேள்விகள் அவரது மனநிலையை மேலும் பாதிக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். பேட்டியின் இறுதியில், “நீங்கள் IPL கோப்பையுடன் நிறைவடைவீர்கள்” எனக் கூறி வீடியோ முடிக்கப்பட்டிருந்தாலும், உண்மையான தாக்கம் எதிர்மறையாகவே அமைந்துள்ளது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “ஒரு வீரரின் உணர்வுகளை வைத்து விளையாட வேண்டாம். வெறும் லைக்குகள், ஷேர் கிடைக்கவேண்டுமென்று இப்படியான வேலைகள் செய்யக்கூடாது” எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், “லக்னோ அணி தொடர்ந்து வீரர்களை தரமில்லாத முறையில் கையாள்கிறது. இதற்கு முன் கேஎல் ராகுலை மைதானத்திலேயே உரிமையாளர் திட்டியது போல, இப்போது மில்லரை புண்படுத்தியுள்ளனர் எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.