உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் பகுதியில் சஸ்னி கேட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காசி பாடாப்பகுதியில், கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பக்கத்து வீட்டுக்காரர்களான அனாஸ் மற்றும் மொஹ்சின் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் பெரியவர்களின் உதவியுடன் இந்த தகராறு முதலில் முடிவுக்கு வந்துள்ளது. வியாழக்கிழமை இரவு இந்த தகராறு மீண்டும் தொடங்கி வாக்குவாதம் தீவிரமடைந்து கைகலப்பாக மாறியுள்ளது. இதில் இருதரப்பினரும் கூர்மையான ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு வீடுகளின் மேல் மாடிகளில் இருந்து துப்பாக்கி சூடு மற்றும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நகர காவல் கண்காணிப்பாளர் எம். சேகர் பதாக், 5 ஐந்து பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ஜவர்கலால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள மூன்று பேர் முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அப்பகுதியில் நிலைமை பழைய நிலைக்கு திரும்பி உள்ளது.
மேலும் தகராறில் ஈடுபட்டவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அப்பகுதியில் இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.