மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு உரிய மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்த கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்று விசாரணை நடைபெறது.
அதில், மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் மீண்டும் காப்புகாடாக மாற்றும் தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது என மத்திய அரசு கூறியுள்ளது.
ஏற்கனவே இந்த விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்போது செயல்படுத்தி வரும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேலும் மாஞ்சோலை பகுதி புலிகள் வாழக்கூடிய பகுதி ஆக இருப்பதால் அங்கு எப்படி மக்களை வசிக்க அனுமதிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பி இருந்தது. இது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
கடந்த மார்ச் 7-ம் தேதி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. அதற்கான அனுமதியும் வழங்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது
`தமிழ்நாடு அரசின் முயற்சிகள் மிகவும் முக்கியமான ஒன்று’அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதியை மீண்டும் காப்புக் காடாக மாற்றுவதற்கான தமிழ்நாடு அரசின் முயற்சிகள் மிகவும் முக்கியமான ஒன்று. காரணம் புலிகள் நடமாடக்கூடிய பகுதியாகவும், யானைகள் வழித்தடமாகவும் இந்தப் பகுதி இருக்கின்றது. கடந்த நூறு ஆண்டுகளாக வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தான் இந்த தேயிலை தோட்டம் என்பது அமைந்திருக்கிறது. எனவே அதை பழைய படி மாற்ற வேண்டியது மிகவும் அவசியமானது” என விரிவான வாதங்களை முன் வைத்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்கனவே தேவைக்கும் அதிகமான மறுவாழ்வு திட்டங்கள் செய்து தரப்பட்டிருக்கின்றது. ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் தமிழ்நாடு அரசின் திட்டங்களை ஏற்றுக்கொண்டு மாஞ்சோலை பகுதியில் இருந்து வெளியேறி விட்டார்கள். அவர்களது குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே இந்த மனுவை உடனடியாக முடித்து வைக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளின் வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாஞ்சோலை விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை மனுக்கள் மீதான விசாரணையை வரும் ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
கடந்த முறை வழக்கு விசாரணை நடைபெற்ற போது, `புலிகள் வசிக்கக்கூடிய இடத்தில் மனிதர்களை எப்படி தோட்ட வேலைகளுக்காக அனுமதிக்க முடியும்?’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Vikatan Playஇப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!