பாலியல் குற்றவாளியை காட்டிக் கொடுத்த வாஷிங் மெஷின்- எப்படி தெரியுமா?
BBC Tamil March 26, 2025 10:48 PM
Getty Images

தென்கொரியாவில் உள்ள உயர்நீதிமன்றமானது 24 வயது நபரை தொடர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றவாளி என உறுதி செய்துள்ளது.

பாலியல் வன்கொடுமை சம்பவம் வாஷிங்மெஷினின் கண்ணாடி கதவில் பிரதிபலித்தது சிசிடிவியில் பதிவானதை ஆதாரமாகக் கொண்டு நீதிமன்ற தீர்ப்பு அமைந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்திற்கு ஆதாரமாக பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய சிசிடிவி காட்சிகளில் முதலில் குற்றச்சம்பவம் பதிவாகாதது போன்றே தோன்றியது. பின்னரே வாஷிங்மெஷின் கதவில் பதிவான பிரதிபலிப்புக் காட்சிகளை விசாரணை அதிகாரிகள் கவனித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட நபர் ஏற்கெனவே முன்னாள் காதலியை வன்புணர்வு செய்ததாகவும், மைனர் பெண்ணுடன் உறவு கொண்டதாகவும் வேறு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

Getty Images கோ ப்புக்காட்சி

கடந்த நவம்பர் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில் குற்றவாளி என தீர்ப்பளித்து, அவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருடன் உடன்பாடு ஏற்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம் அவருக்கான தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்துள்ளது.

சிறை தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்ட பின்னரும் 7 ஆண்டுகளுக்கு, இவரது குற்றத்தின் தன்மையை குறிப்பிடும் பட்டையை கணுக்காலில் அணிய வேண்டும் என்றும், குழந்தைகள், பதின் பருவத்தினர், மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடங்களில் பணிபுரிய தடை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.