TVK-வில் பதவிக்கு பணம் வாங்குவது 100% உண்மை…. “இது புஸ்ஸி ஆனந்துக்கும் தெரியும்”… விஜய் பார்க்கவே இந்த பேட்டி… பரபரப்பை கிளப்பிய நிர்வாகி..!!
SeithiSolai Tamil March 27, 2025 02:48 PM

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். மொத்தம் 120 மாவட்டங்களாக பிரித்து மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்த நிலையில் அதற்கு கீழ் உள்ள ஒன்றிய மற்றும் பிற பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் விஜய் கட்சியில் ஆரம்பத்தில் இருந்தே பதவிக்கு பணம் கேட்பதாக சர்ச்சை எழுந்து வருகிறது.

இது தொடர்பாக பல நிர்வாகிகள் அடிக்கடி கூறிவரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு நிர்வாகி அதைப் பற்றி பேசியுள்ளார். அதாவது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் அந்த மாவட்ட செயலாளர் பாலன் அனைத்து பொறுப்புகளுக்கும் பணம் கேட்பதாகவும் விஜய்க்கு இது தெரிய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் தற்போது பேட்டி கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, அவர் என்னிடம் மாவட்ட செயற்குழு பொறுப்பிற்கு 4 லட்ச ரூபாய் பணம் கேட்ட நிலையில் அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது. நான் கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் சந்தித்த நிலையில் அவருடைய தீவிர ரசிகராக இருக்கிறேன். அப்போது எடுத்துக்கொண்ட போட்டோ கூட என்னிடம் இருக்கிறது என்று கூறி அந்த போட்டோவை காண்பித்தார். நான் விஜயின் மக்கள் பொறுப்பு இயக்கத்தில் பணியாற்றியுள்ள நிலையில் என்னிடம் பணம் கேட்ட மாதிரி தான் பலரிடமும் பணம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எதுக்காக பதவிக்கு பணம் கேட்கிறீர்கள் என்று கேட்டால் தலைமை தான் கேட்கிறார்கள் என்கிறார்கள். அப்ப விஜய் தான் பணம் கேட்கிறாரா என்று கேட்டால் இல்லை என்று கூறுகிறார்கள். இளையராஜா என்பவரை நகரச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்த நிலையில் அவர் பணம் கொடுக்கவில்லை என்பதால் அவரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு திமுகவிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பு சேர்ந்த ஒருவரை நகர செயலாளராக நியமித்துள்ளனர்.

நான் இதைப் பற்றி பொதுச் செயலாளருக்கு தினசரி வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பும் நிலையில் அவர் எதுவுமே பதில் சொல்லவில்லை. எனவே தலைவர் இதை பார்க்க வேண்டும் அவரிடம் இந்த பிரச்சனையை நேரடியாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இப்போது செய்தியாளர்களை சந்திக்கிறோம் என்று கூறினார். மேலும் விழுப்புரம் மாவட்டம் முழுவதுமே பதவிக்கு பணம் கேட்கிறார்கள் என்று அவர் கூறியதோடு அதற்கான ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார். அதோடு தமிழக வெற்றி கழகத்தில் பதவி வழங்க 100% பணம் வாங்குகிறார்கள் என்பது உண்மை என்றார். இது தற்போது தமிழக வெற்றிக் கழகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.