அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்தார். இதனால் மீண்டும் தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமையும் என்று கூறப்படும் நிலையில் இது பற்றி நேற்று செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, டெல்லியில் உள்ள அதிமுக கட்டிடத்தை பார்வையிடுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் செல்வதாக கூறிய நிலையில் திடீரென அமித்ஷாவை சந்தித்துள்ளனர்.
இந்த அளவுக்கு ஒளிவு மறைவாக உள்துறை மந்திரியை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன.? அவரை பகிரங்கமாகவே சந்திக்கலாமே. முதலில் கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக சென்ற நிலையில் தற்போது அமித்ஷாவை சந்தித்துள்ளார். ஆனால் கூட்டணி பற்றி பேசவில்லை தமிழக மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசினோம் என்கிறார். தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில் கல்யாணத்திற்கு எந்த தேதியை தேர்வு செய்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.
பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டோம் அவர்களுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூறியவர்கள் இன்று மணி கணக்கில் பேசிய நிலையில் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு பிரச்சினைகள் பற்றி பேசி இருந்தால் அதற்கான மனுவை வாங்கிவிட்டு மூன்று நிமிடத்தில் அனுப்பி இருப்பார்கள்.
அரசியல் உறவே கிடையாது என்று சத்தியம் செய்த எடப்பாடி பழனிச்சாமி என்ன கட்டாயத்தின் பெயரில் அவரை சந்தித்தார் என்பது தெரியவில்லை. ஏதோ ஒரு நெருக்கடிக்கு தள்ளப்பட்டு தான் அவர் சந்தித்துள்ளார் என்று சந்தேகம் இருக்கிறது. மேலும் இது தொடர்பான செய்திகள் மெல்ல மெல்ல வெளிவரும் என்று கூறியுள்ளார்.