சென்னை தரமணி என்ற பகுதியில் டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனை கல்லூரி நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் எஸ்எப்ஐ மாணவ அமைப்பினர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தப் போராட்டத்தின் போது மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கல்லூரி வளாகத்திற்குள் நுழைய முயன்ற மாணவர்களை காவல் துறையினர் தடுக்க முயன்றனர். எனவே அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் மாநில தலைவர் சம்சீர் அகமது பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் “கடந்த 16ஆம் தேதி தரமணியில் உள்ள கல்லூரியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக இந்திய மாணவர் சங்கத்தில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சக மாணவர்கள் மூலம் புகார் வந்தது.
அதன் அடிப்படையில் இந்திய மாணவர் சங்கமும், அனைத்து இந்திய மாதர் சங்கமும் கல்லூரி நிர்வாகத்தினை எதிர்த்து போராட்டத்தை நடத்தினோம். கடந்த 16ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்திற்கு இன்று வரை கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதுமட்டுமின்றி அரசு வழங்கிய வழிகாட்டுதல்களையும் பின்பற்றவில்லை என்றும் அவர் கூறினார்.
அதோடு கல்லூரியின் பெயர் கெட்டுவிடும் என்ற நோக்கில் பாதிக்கப்பட்ட மாணவியை யாருக்கும் தெரியாமல் கல்லூரியை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர். கல்லூரியின் இந்த முறையற்ற செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’ என்றும் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது என்றும் கூறினார்.