'சம்பளம்' - மக்கள் வேலைக்குச் செல்ல முக்கியமான ஒன்று இது.
மாதக் கடைசியிலேயோ, மாத முதல் நாள்களிலேயோ போடும் இந்தச் சம்பளத்தை வைத்துதான் வேலை பார்க்கும் அத்தனை பேருக்கும் அந்த மாதமே கழியும்.
இப்படிப்பட்ட முக்கியமான சம்பளத்தை ஃபிரஷர்ஸ் (புதிதாக வேலைக்குச் சேர்பவர்கள்) எப்படி பேசி பெற வேண்டும் என்பதை விளக்குகிறார் மனித வள நிபுணர் டாக்டர் இஸ்ரேல் இன்பராஜ்.
"ஃபிரஷர்ஸ் வேலைக்குச் சேரும்போது தங்களது சம்பளத்தைப் பற்றி பேசி முடிவு எடுப்பது என்பது மிகவும் சேலஞ்சான ஒரு விஷயம். காரணம், அவர்கள் இதற்கு முன்பு எங்கும் வேலை பார்த்திருக்கமாட்டார்கள். சம்பளம் குறித்துப் பேசியும் இருக்கமாட்டார்கள்.
பெரும்பாலும், அவர்கள் படித்த கல்வி நிறுவனங்களை வைத்து அவர்களது சம்பளம் நிர்ணயிக்கப்படும். அதையும் தாண்டி 'அவர் தனது சம்பளத்தை ஏற்ற வேண்டுமானால்' இவற்றைச் செய்ய வேண்டும்...
நிறுவனத்திற்கு என்ன பயன்?அவர் வேலைக்குச் சேர்வதால், 'அந்த நிறுவனத்திற்கு என்ன பயன்?', 'அவரின் இருப்பு நிறுவனத்திற்கு என்ன கொடுக்கும்?', 'நிறுவனம் மற்றும் பிராண்டின் மதிப்பின் வளர்ச்சிக்கு என்ன செய்வார்?' போன்றவற்றை சம்பள பேச்சுவார்த்தையின்போது விளக்க வேண்டும்.
குறிப்பிட்ட அந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பொதுவாக ஒரு தகுதி வைத்திருப்பார்கள். அந்தத் தகுதியைத் தாண்டி அந்தப் பணி சம்பந்தமான எக்ஸ்ட்ரா தகுதி அவரிடம் எதாவது இருந்தால், அதை சம்பள பேச்சுவார்த்தையின்போது குறிப்பிடலாம்.
மொழிகளும், தலைமை பண்பும்!இன்றைய காலகட்டத்தில் மொழி மிக முக்கியமான ஒன்று. ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்திருந்தால், அதைக் குறிப்பிட்டுப் பேசலாம்.
தொழில்நுட்ப பணிகளைத் தவிர்த்து நிர்வாக சம்பந்தமான பணிகளில், கல்வியைத் தாண்டி கூடுதலாக என்ன விஷயங்களில் பங்கேற்றிருக்கிறார், அதில் அவரது தலைமை பண்பு எப்படி இருந்தது என்பதை விளக்கலாம்".