மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!
WEBDUNIA TAMIL March 27, 2025 03:48 PM


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கைது நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்களுக்கு இதுகுறித்து கடிதம் எழுதியிருந்தாலும், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று தமிழகத்தை சேர்ந்த 11 மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களுக்கு சொந்தமான ஒரு விசைப் படகையும் பறிமுதல் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரு விசைப் படகையும் அதிலிருந்த 11 மீனவர்களையும் கைது செய்தது. இதனால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.