கோயில் குடமுழுக்கிற்குப் பிறகு திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு!
Top Tamil News March 27, 2025 03:48 PM

கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர், திருச்செந்தூர், தஞ்சாவூர், பழனி, ராமேஸ்வரம் திருக்கோயில்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக இன்று(மார்ச் 26) பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தனர். இந்த தீர்மானத்தின் மீது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளித்து கூறியதாவது:-

அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதால்தான், கோயில்களுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
திருச்செந்தூர், ராமேஸ்வரம், பழனி கோயில்களில் நெரிசல் காரணமாக பக்தர்கள் உயிரிழக்கவில்லை. அவர்களின் உயிரிழப்பிற்கு உடல்நலக்குறைவே காரணம். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தபோது உயிரிழந்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுமா என்று நீங்கள் கேட்பீர்கள் என்று நினைத்தேன். கோரிக்கை ஏற்படுமானால் திருக்கோயில் சார்பில் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். எனினும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் உயிரிழப்பைத் தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும். கோயில்களிலேயே தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரப்படும்.

மேலும் தமிழகத்தில் 2 கோயில்களில் இருந்த அன்னதானத் திட்டத்தை 17 கோயில்களுக்கு விரிவுபடுத்தி ஆண்டுக்கு 3.5 கோடி பக்தர்களுக்கு இறைபசியை மட்டும் அல்லாமல், வயிற்றுப் பசியும் போக்குகிறது திமுக அரசு. மக்கள் அதிகம் கூடும் 17 திருக்கோயில்களுக்கு 1,716 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வரைவை ஏற்படுத்தியதன் மூலமாக, திருச்செந்தூர் கோயிலில் வருகிற ஜூலை 7 அன்று குடமுழுக்குக்குப் பிறகு பார்த்தால் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் கோயில் மாறியிருக்கும். பழனி கோயில் திருப்பதிக்கு நிகராக உள்ளது. அந்த அளவுக்கு கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.