அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் இணைக்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார். மேலும் அதிமுகவினர் கோயிலாக கருதும் கட்சியின் தலைமை அலுவலகத்தை ரவுடிகளை வைத்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கியதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். எனவே அதிமுகவில் இருக்கவே தகுதியற்றவர் பன்னீர்செல்வம் என விமர்சித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தலைவிரித்து ஆடுவதாக எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது, அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விலகி கொள்வதுதான் அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லை என்றால் அவமரியாதையை சந்திப்பார். ஒற்றை தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்று ஆள் வைத்து பேசினார்கள். ஆனால் இதுவரை நடந்த ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை. அதிமுகவில் இணைகிறேன் என நான் சொல்லவே இல்லை. பிரிந்து கிடக்கிற அதிமுக சக்திகள் இணைய வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும் என்று தான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். ஆனால் அதிமுக எந்த காலத்திலும் வெற்றிபெற கூடாது என எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என கூறியுள்ளார்.