மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் ஆணித்தனமாக கூறி வருகின்றனர். மும்மொழிக்கொள்கையை ஏற்றால் மட்டும் தான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையதள பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே அறிக்கைகள் வெளியிடப்படும்.
தற்போது கூடுதலாக இந்தி மொழியிலும் அறிக்கை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெங்கடேசன் எம்பி கூறியதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்திற்கு நிதியுதவி அளிக்காத ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியை திணிக்கிறது. பாஜகவிற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்தது இல்லை என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு உதாரணமாகும் என கூறியுள்ளார்.