அமெரிக்காவில் 3 மாத குழந்தையை தீயணைப்பு நிலைய தலைவரான ஸால்ட் என்பவர் தரையில் தூக்கி வீசி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிரையன் சால்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஃபால்ஸ் டவுன்ஷிப் ஃபயர் கம்பெனி நம்பர் 1 என்னும் தீயணைப்பு நிலையத்தில் தலைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மூன்று மாதத்தில் ஒரு கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில் சம்பவ நாளில் அவரின் குழந்தை திடீரென அழுது கொண்டே இருந்தது. இதனால் ஒரு கட்டத்தில் கோபமடைந்த ஸால்ட் 3 மாத குழந்தை என்றும் பாராமல் தரையில் தூக்கி வீசினார். இதில் அந்த குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து குழந்தையை தூக்கிக் கொண்டு தனது மாமனாரின் வீட்டிற்கு சென்ற அவர் குழந்தை தவறி கீழே விழுந்து விட்டதாகவும், அதனால் காயம் ஏற்பட்டதாகவும் கூறி நாடகமாடியுள்ளார்.
பின்னர் குழந்தையை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் தலையில் பிளவு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். ஆனால் காயத்தின் மீது மருத்துவர்களுக்கு சந்தேகம் இருந்ததால் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் ஸால்டை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் குழந்தை தாக்கியதை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.