ஓபிஎஸ், பிரிந்தது பிரிந்தது தான்... இனி சேர்வதற்கு வாய்ப்பில்லை... எடப்பாடி பேட்டி!
Dinamaalai March 27, 2025 10:48 PM

ஓபிஎஸ்பிரிந்தது, பிரிந்தது தான். இனி சேர்வதற்கு சாத்தியம் கிடையாது. அவர் அதிமுகவில் இருப்பதற்கு தகுதி இல்லை என தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பசாமி பாண்டியன் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் உடல் இன்று திருநெல்வேலியில் அடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வருகை தந்தார்.

பின்னர் கார் மூலம் திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், நேற்று முன்தினம் உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை பல்வேறு திட்டத்திற்கு விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருக்கின்றேன். 

ஓபிஎஸ்ஸும் நானும் பிரிந்தது, பிரிந்தது தான். இனி சேர்வதற்கு சாத்தியம் கிடையாது. கட்சியை எப்போது எதிரிகளிடம் அடமானம் வைத்தாரோ, கட்சியின் தலைமை கழகத்தை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோவிலை என்றைக்கு அவர் உடைத்தாரோ, அவருக்கு அந்த கட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லை. 

திராவிட முன்னேற்றக் கழகத்தை தவிர எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி அல்ல. ஒத்த கருத்துள்ள கட்சிகளை நாங்கள் சேர்த்து கொள்வோம். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மோசமான ஆட்சி போதை பொருள் நடமாட்டத்திற்கு அளவே இல்லை.  காவல்துறைக்கு அவர்கள் அச்சபடவில்லை. சர்வ சாதாரணமாக கொலை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது”  என்றார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.